இனி ரயிலில் பொது பெட்டியில் உள்ள பயணிகளுக்கும் உணவு !
இனி ரயிலில் பொது பெட்டியில் உள்ள பயணிகளுக்கும் உணவு !
ADDED : ஜூலை 24, 2025 12:49 PM

புதுடில்லி : ரயிலில் பொது பெட்டிகளில் உள்ள பயணிகளுக்கும் உணவு வழங்கிட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே ஒரு சிறப்பு வசதியைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக சில குறிப்பிட்ட ரயில்களில் மட்டும் இந்த சேவை துவங்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதிக ரயில்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும் துறையான ரயில்வேயில் நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயணித்து வருகின்றனர். தொழில்நுட்பம் வளர ரயில்களில் மேலும் பல்வேறு சிறப்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ரயிலில் பயணிப்போருக்கு உணவு பெரும் முக்கியமாகவும் மற்றும் சுத்தமானதாகவும் தேவைப்படுகிறது. இதற்கென வந்தேபாரத், ஏ.சி., பொருத்தப்பட்ட ரயில்களில் பயணிகளுக்கு கூடுதல் பணம் உணவுக்கென வசூலித்து உணவு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண மக்கள் பயணிக்கும் பொது ரயில் பெட்டிகளில் ரயில்வே மூலம் உணவு கிடைக்காமல் இருந்து வருவது பெரும் குறையாக உள்ளது.
இந்நிலையில் மத்திய ரயில்வே ஐ.ஆர்.சி.டி.சி பொதுப் பெட்டிகளுக்கும் ஒரு புதிய வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ் பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அவர்களின் இருக்கைகளுக்கே பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும்.
வெறும் ரூ.80க்கு நல்ல தரமான உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்படும். இந்த உணவில் சாதம், பருப்பு, ஏதேனும் ஒரு குழம்பு, காய்கறிகள், ரொட்டி, ஊறுகாய் ஆகியவை அடங்கும். உணவு சாப்பிட கரண்டிகள் வழங்கப்படும். ஒரு சராசரி பயணியின் வயிற்றை நிரப்பும் அளவிற்கு போதுமானதாக இருக்கும்.
அதிவேக எக்ஸ்பிரஸ் ஸ்லீப்பர் மற்றும் ஏசி பெட்டிகளில் ரயில்வேயால் பேக் செய்யப்பட்ட உணவு வழங்கப்படுவது போலவே, பேக்கிங்கும் மிகவும் நல்ல தரமாக இருக்கும். தற்போது 6 ரயில்களில் பொதுப் பெட்டி பயணிகளின் இருக்கையில் உணவு பரிமாறும் வசதியை ஐ.ஆர்.சி.டி.சி தொடங்கியுள்ளது.
இந்த ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இப்போது மலிவு விலையில் அவர்களின் இருக்கைகளில் நல்ல தரமான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கிறது. இந்த வசதியை விரைவில் அதிக ரயில்களில் செயல்படுத்த ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதனால் அதிகமான பயணிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.