இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள்: துணை ஜனாதிபதி பேச்சு
இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள்: துணை ஜனாதிபதி பேச்சு
ADDED : டிச 11, 2024 10:14 PM

புதுடில்லி: '' வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள் உள்ளன,'' என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளார்.
ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கரை பதவியில் இருந்து நீக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ' இண்டியா' கூட்டணி கட்சிகள் கொண்டு வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்நிலையில், டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜக்தீப் தன்கர் பேசியதாவது: நாட்டை துண்டாட நினைக்கும், பிளவுபடுத்த நினைக்கும், நாட்டின் அமைப்புகளை அவமானப்படுத்தும் செயல்கள் திட்டமிடப்பட்டு வருகின்றன. தேசத்திற்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு செயல்களையும் நாம் முறியடிக்க வேண்டும்.
பொருளாதார ரீதியில் நாடு வளர்ச்சி பெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதாரம் தள்ளாட்டத்தில் இருந்தது. இன்று பெரிய பொருளாதார நாடுகளில் ஐந்தாவது இடத்தில் இந்தியா உள்ளது. இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும். 2047 ல் வளர்ச்சியடைந்த இந்தியா என்பது கனவு அல்ல. அது நமது லட்சியம். இது நிச்சயம் நிறைவேறும். இந்தியாவின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத சக்திகள், உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ளனர்.
தேசப்பற்றில் நாம் ஒரு போதும் சமரசம் செய்யக்கூடாது. நாட்டில் உள்ள ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியுடனும், வளர்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்பது தேசப்பற்றில் உள்ளார்ந்ததாக உள்ளது. இதற்கு குடிசைத் தொழில், கிராமப்புறத் தொழில் மற்றும் சிறுகுறு தொழில்களை நோக்கி நமது கவனம் செல்லும் போதே சாத்தியமாகும்.
கல்வியும் திறனும் முக்கியமாகும். நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில், திறன் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். நமக்கு என உரிமைகள் உள்ளன. அவற்றுடன் கடமை உணர்வும் இருக்க வேண்டும். இவ்வாறு ஜக்தீப் தன்கர் கூறினார்.