மீண்டும் உற்பத்தியை துவங்குமா போர்டு நிறுவனம்: நிர்வாகிகளுடன் அமெரிக்காவில் ஸ்டாலின் சந்திப்பு
மீண்டும் உற்பத்தியை துவங்குமா போர்டு நிறுவனம்: நிர்வாகிகளுடன் அமெரிக்காவில் ஸ்டாலின் சந்திப்பு
UPDATED : செப் 11, 2024 09:02 AM
ADDED : செப் 11, 2024 08:54 AM

வாஷிங்டன்: 'போர்டு நிறுவனம் மீண்டும் தொழில் தொடங்க அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். பல்வேறு நிறுவனங்கள் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று (செப்.,11) சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'போர்டு நிறுவனத்தை கொண்டு வர அமெரிக்காவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. போர்டு உடனான 30 ஆண்டு கால கூட்டணியை மீண்டும் புதுப்பிக்கும் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தோம். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை பயன் உள்ளதாக அமைந்தது' என குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான போர்டு, சென்னை அடுத்த மறைமலை நகரில், 1996ல் தொடங்கப்பட்டது. இங்கிருந்து ஆண்டுக்கு 2.50 லட்சம் கார் இன்ஜின்கள் தயார் செய்யப்பட்டன. 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நஷ்டத்தை கருத்தில் கொண்டு 2 ஆண்டுக்கு முன், இந்தியாவில் தன் கார் உற்பத்தியை போர்டு நிறுவனம் நிறுத்தியது. குஜராத்தில் சனந்த், தமிழகத்தில் சென்னை மறைமலை நகர் என 2 ஆலைகளும் மூடப்பட்டன.
குஜராத்தில் செயல்பட்ட போர்டு உற்பத்தி ஆலை, டாடா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டு விட்டது. ஆனால், சென்னை மறைமலை நகரில் 360 ஏக்கரில் அமைந்துள்ள போர்டு உற்பத்தி ஆலை, இன்னும் அந்த நிறுவனம் வசமே உள்ளது. அங்கு எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்புக்கு போர்டு நிறுவனம் திட்டமிட்டு வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான், போர்டு நிறுவன அதிகாரிகளுடன், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் பேச்சு நடத்தியுள்ளார். இதற்கு என்ன விதமான பலன் கிடைக்கும் என்பது போகப் போகத்தெரியும்.