ADDED : பிப் 12, 2025 10:25 PM
புதுடில்லி:முதல்வர், அமைச்சர்கள் வெளிநாடுகளில் பயணம் மேற்கொள்ள மத்திய அரசின் அனுமதி தேவை என்ற நடைமுறையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் வாபஸ் பெற்றார்.
கடந்த 2022ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற 8வது உலக நகரங்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள அப்போதைய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் விரும்பினார்.
இதேபோல் லண்டனின் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆம் ஆத்மி அரசில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் விரும்பினார். இத்தகைய வெளிநாட்டுப் பயணங்களுக்கு மத்திய அரசிடம் அனுமதி பெறுவது கட்டாயம்.
இந்த நடைமுறையை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் கைலாஷ் கெலாட் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நடந்து வந்தது.
இதற்கிடையில் ஆம் ஆத்மியில் இருந்து வெளியேறி, கடந்த நவம்பரில் பா.ஜ.,வில் இணைந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக கைலாஷ் கெலாட் சார்பில் நீதிபதி சச்சின் தத்தாவிடம் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, வாபஸ் பெற நீதிபதி அனுமதி அளித்தார்.

