ADDED : செப் 24, 2024 07:31 AM

பெங்களூரு: 'பெங்களூரில் 30 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண் கொலையில், தடயங்கள் கிடைப்பதில், தடயவியல் நிபுணர்கள் திணறி வருகின்றனர். தடயங்களை எப்படி அழிப்பது என்பதை தெரிந்து கொண்டு, அழித்திருக்கலாம்' என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வட மாநிலத்தைச் சேர்ந்தவர் மஹாலட்சுமி, 29. இவருக்கு திருமணமாகி, ஒரு குழந்தையும் உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், கடந்த ஆறு மாதங்களாக, வயாலிகாவலில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஷாப்பிங் மால் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த போலீசார், பூட்டை உடைத்து வீட்டினுள் சென்றனர்.
அங்கிருந்த பிரிஜ்ஜில் மஹாலட்சுமியின் உடல் 30 துண்டுகளாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இச்சம்பவம் மாநிலம் முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தடயங்களை கண்டுபிடிக்க தடயவியல் நிபுணர்கள், விரல் ரேகை நிபுணர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து இரண்டு மணி நேரம் வீடு முழுதும் ஆய்வு செய்தனர். ஆனால், ரத்தக் கறைகள், கைவிரல் ரேகைகள் எதுவும் கிடைக்கவில்லை.
கொலை நடந்த இடத்தில் ரத்தம் சுத்தம் செய்த பின்னரும், கறைகளை காணலாம். இதை கண்டுபிடிக்க, 'லுமினால்' என்ற ரசாயனத்தை பயன்படுத்துவர். இந்த ரசாயனத்தை பயன்படுத்தினால், சம்பவம் நடந்து 200 நாட்கள் ஆனாலும், ரத்தக்கறையை கண்டுபிடிக்கலாம்.
ஆனால், மஹாலட்சமி கொலை வழக்கில், லுமினால் ரசாயனம் பயன்படுத்தியும், ரத்தக்கறையை கண்டுபிடிக்க முடியவில்லை. மஹாலட்சுமியை கொலை செய்தவர்கள், வீட்டை சுத்தமாக கழுவி உள்ளனர்.
கொலை செய்த பின் தடயங்களை அழிக்கும் திட்டத்துடன் கொலையாளிகள் வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தடயங்களை எப்படி அழிப்பது என்பதை தெரிந்து கொண்டு, இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
மொத்தத்தில் மஹாலட்சுமி கொலையில் தடயம் கிடைக்காமல், தடயவியல் நிபுணர்கள் விழிபிதுங்கி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை, மஹாலட்சுமியின் உடல் துண்டு, துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்த, பிரிஜ்ஜை போலீசார் கைப்பற்றி, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகளை கண்டுபிடிக்க மத்திய மண்டல டி.சி.பி., சேகர் தலைமையில் எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் கொலையாளிகளை மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தேடி வருகின்றனர்.
மஹாலட்சுமி அஸ்தி, கணவர் ஹேமந்த் தாசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை கரைக்க தமிழகம் ராமேஸ்வரத்திற்கு அவர் சென்றுள்ளார்.
மஹாலட்சுமியை, அவருடன் பழகிய அஸ்ரப் என்பவர் கொலை செய்திருக்கலாம் என, அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதனால் அவரை பிடித்தும் போலீசார் விசாரித்து தகவல் பெற்றனர். பின்னர், அவரை அனுப்பி வைத்தனர்.