சத்திரம்,- புல்மேடு பாதை சீரமைப்பு பணியில் வனத்துறை
சத்திரம்,- புல்மேடு பாதை சீரமைப்பு பணியில் வனத்துறை
ADDED : நவ 10, 2025 11:39 PM

மூணாறு: சபரிமலை மண்டல கால மகர விளக்கு சீசன் நெருங்குவதால், சத்திரம், புல்மேடு வழியாக சன்னிதானம் செல்லும் காட்டுப்பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இடுக்கி மாவட்டம், வண்டிபெரியாறு அருகில் உள்ள சத்திரம், புல்மேடு, அழுதகடவு, முக்குழி ஆகிய பகுதிகள் வழியாக காட்டுப்பாதையில் நடந்து சபரிமலை சன்னிதானத்துக்கு செல்லலாம்.
அவற்றில் சத்திரம், புல்மேடு காட்டுப்பாதையை பக்தர்கள் கூடுதலாக பயன்படுத்துவர்.
அந்த பாதையை சீரமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். புல்மேட்டில் இருந்து சன்னிதானம், 12 கி.மீ., துாரத்தில் உள்ளது.
அந்த பாதையில் படர்ந்துள்ள செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.
புல்மேடு, சன்னிதானம் இடையே அரை கி.மீ., இடைவெளியில் குடிநீர் வசதி செய்யப்பட்டு, பக்தர்களுக்கு உதவும் வகையில் வனத்துறை ஊழியர்கள், சுற்றுச்சூழல் காவலர்கள் ஆகியோர் பணியமர்த்தப்படவுள்ளனர்.
கடந்த மண்டல காலத்தில் ஒரு லட்சத்து 32,500 பக்தர்கள் புல்மேடு வழி சென்றநிலையில், சத்திரத்தில் போதிய வசதிகள் இன்றி பக்தர்கள் கடுமையாக சிரமப்பட்டனர்.
இம்முறையும் வண்டிப்பெரியாறு ஊராட்சி, தேவசம் போர்டு ஆகியோர் முறையாக எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதனால் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாக வாய்ப்புள்ளது.

