சட்டவிரோத ஹோம் ஸ்டேக்கள் அகற்ற தயாராகிறது வனத்துறை
சட்டவிரோத ஹோம் ஸ்டேக்கள் அகற்ற தயாராகிறது வனத்துறை
ADDED : அக் 05, 2024 11:02 PM
சிக்கமகளூரு: சிக்கமகளூரின் பல்வேறு இடங்களில் விதிமீறலாக அமைக்கப்பட்ட ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகளை அகற்ற வனத்துறை தயாராகிறது.
சிக்கமகளூரு வன மண்டல எல்லைக்கு உட்பட்ட, முல்லையன கிரி, இனாம் தத்தாத்ரேய பாபா புடன்சாமி தர்கா, சந்திர துரோண பர்வதம் சுற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன.
உத்தரகன்னடா, அங்கோலாவின் சிரூர், ஷிராடிகாட் நிலச்சரிவு, கேரளாவின் வயநாட்டில் நடந்த அசம்பாவிதத்துக்கு பின், வனத்துறை எச்சரிக்கை அடைந்துள்ளது. அசம்பாவிதங்களுக்கு சட்டவிரோதமாக ஹோம் ஸ்டேக்கள், சொகுசு விடுதிகள் அமைப்பதே காரணம் என, வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து வனத்துறை வெளியிட்ட அறிக்கை:
சிக்கமகளூரு முல்லையன கிரி, இனாம் தத்தாத்ரேய பாபாபுடன் சாமி தர்கா, சந்திர துரோண பர்வதம் சுற்றுப்பகுதிகளில் உள்ள ஸ்டேக்கள், சொகுசு விடுதிகளின் ஆவணங்களை தாக்கல் செய்யும்படி, அவற்றின் உரிமையாளர்களுக்கு, வனத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை பரிசீலித்தபோது, சட்டவிரோதமாக கட்டப்பட்டது தெரிந்தது. இவற்றை அகற்றும்படி வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டார். எனவே சந்திரதுரோண பர்வதத்தின், ஹுக்குன்டா, மல்லேனஹள்ளி, அரிசினகுப்பே உட்பட, பல இடங்களில் உள்ள, 30 சட்டவிரோத ஹோம்ஸ்டேக்கள், சொகுசு விடுதிகளை அகற்ற, அதிகாரிகள் தயாராகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.