மாதம் ரூ.60 கோடி லஞ்சம் வாங்கினார்: ஆந்திர மாஜி முதல்வர் மீது குற்றச்சாட்டு
மாதம் ரூ.60 கோடி லஞ்சம் வாங்கினார்: ஆந்திர மாஜி முதல்வர் மீது குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 20, 2025 11:44 PM

அமராவதி: ஆந்திராவில் 3,500 கோடி ரூபாய் மதுபான ஊழல் வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, மாதம் 60 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, 2019 முதல் 2024 வரை முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர்.காங்.,கை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், மதுபான கொள்முதல், விற்பனையில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது, 2019ல் ஜெகன்மோகன் முதல்வரானதும், தனியாரிடம் இருந்த மதுக்கடைகள், ஆந்திர பிரதேச மதுபான கழகத்தின் கீழ் வந்தன.
இதற்கு தேவையான மதுபானங்களை, பிரபலமில்லாத நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்ய கமிஷன் பெற்றதாகவும், அரசுக்கு 3,500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நெருக்கமானவராக கருதப்படும் ஒய்.எஸ்.ஆர்.காங்., ராஜம்பேட்டை லோக்சபா எம்.பி., மிதுன் ரெட்டியிடம் பலமணி நேரம் விசாரணை நடத்திய எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு விசாரணை குழுவினர், அவரை சமீபத்தில் கைது செய்தனர்.
இந்த வழக்கில், சிறப்பு விசாரணைக் குழு, விஜயவாடா நீதிமன்றத்தில், 305 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதில் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் பெயர் குற்றவாளியாக குறிப்பிடப்படவில்லை. அதே நேரத்தில், மாதம், 60 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெற்றதாக அதில் கூறப்பட்டுள்ளது.