ஆம் ஆத்மிக்கு தாவினார் காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,
ஆம் ஆத்மிக்கு தாவினார் காங்., முன்னாள் எம்.எல்.ஏ.,
ADDED : மார் 10, 2024 12:27 AM
சண்டிகர்:பஞ்சாப் மாநிலத்தில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., குர்பிரீத் சிங், ஆம் ஆத்மி கட்சியில் நேற்று இணைந்தார்.
பஞ்சாபின் பதேகர் சாஹிப் மாவட்டம் பஸ்ஸி பதானா தொகுதியில் 2017ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் குர்பிரீத் சிங்.
கடந்த 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில் அதே தொகுதியில் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், நுாற்றுக்கும் மேற்பட்ட தன் ஆதரவாளர்களுடன் குருபிரீத் சிங், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் நேற்று இணைந்தார்.
இதுகுறித்து, பஞ்சாப் அமைச்சர் குர்மீத் சிங் ஹேயர், “குர்பிரீத் சிங் வருகையால் பதேகர் சாஹிப் மாவட்டத்தில் ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் வளர்ச்சி ஏற்படும்.
அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இலவச மின்சாரம் உள்ளிட்ட ஆம் ஆத்மி அரசின் திட்டங்களால் ஏராளமான மக்கள் எங்கள் கட்சியில் இணைகின்றனர்,”என்றார்.
குர்பிரீத் சிங் கூறியதாவது:
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் ஒழுக்கக் கேடுகள் அதிகரித்து விட்டது.
முதல்வர் பகவந்த் மானின் மக்கள் பணி என்னை மிகவும் கவந்து விட்டது. நேர்மையான தலைவராக திகழ்கிறார். அதனால்தான் ஆம் ஆத்மியில் இணைத்துக் கொண்டேன். மாநிலம் முழுதும் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி மட்டுமே பேசுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
லோக்சபா தேர்தலில் பதேகர் சாஹிப் தொகுதியில் குர்பிரீத் சிங் ஆம் ஆத்மி சார்பில் களம் இறக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

