காங்கிரஸ் மாஜி எம்.பி., தங்கை என்று கூறி ரூ.8 கோடி மோசடி
காங்கிரஸ் மாஜி எம்.பி., தங்கை என்று கூறி ரூ.8 கோடி மோசடி
ADDED : டிச 25, 2024 12:58 AM

பெங்களூரு, கர்நாடகாவில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சுரேஷின் சகோதரி என்று கூறி, 8 கோடி ரூபாய்க்கு நகை வாங்கி மோசடி செய்த பெண், அவரது கணவர், நடிகர் தர்மேந்திரா ஆகியோர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரில், 'வராஹி' என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருபவர் சுனிதா ஐதால், 44. இவரது கடைக்கு, 2023 அக்டோபர் மாதம் ஐஸ்வர்யா கவுடா, 44 என்ற பெண் வந்தார்.
'நான், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி., சுரேஷின் சகோதரி. தொழில் முனைவோராக உள்ளேன்.
உங்கள் நகைக் கடையில் புது கலெக் ஷன் இருப்பதாக கேள்விப்பட்டேன். நகைகளை வாங்கிவிட்டு, பின்னர் பணம் தருகிறேன்' என கூறியுள்ளார்.
சுரேஷின் சகோதரி என்று கூறியதால், ஐஸ்வர்யா பேச்சை சுனிதாவும் நம்பினார்.
இதை சாதகமாக பயன்படுத்தி, கடந்த ஆண்டு அக்டோபர் முதல், இந்த ஆண்டு ஏப்ரல் வரை 14 கிலோ, 600 கிராம் நகைகளை, ஐஸ்வர்யா வாங்கி உள்ளார். இதன் மதிப்பு 8 கோடி ரூபாய்.
கடந்த மே மாதம், ஐஸ்வர்யாவுக்கு போன் செய்த சுனிதா பணம் கேட்டு உள்ளார். அந்த நேரத்தில் லோக்சபா தேர்தல் நடந்ததால், 'தேர்தல் முடிந்ததும் தருகிறேன்' என கூறி இருக்கிறார்.
ஆனால் தேர்தல் முடிந்தும் பணத்தை தரவில்லை. அடிக்கடி சுனிதா போன் செய்து கேட்டதால், 'என் அண்ணன் சுரேஷை உங்களிடம் பேச சொல்கிறேன்' என்று, ஐஸ்வர்யா கூறி உள்ளார்.
இதன்படி சுரேஷ் குரலில் ஒருவர், சுனிதாவிடம் பேசி, 'என் தங்கை தர வேண்டிய பணத்தை, நான் தருகிறேன்' என்று கூறி இருக்கிறார். ஆனாலும் இதுவரை பணம் கொடுக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் சந்திரா போலீசில் சுனிதா அளித்த புகாரில், 'சுரேஷ் சகோதரி என்று கூறி, ஐஸ்வர்யா என்னிடம் இருந்து 8 கோடி ரூபாய்க்கு நகை வாங்கி மோசடி செய்தார்.
கன்னட நடிகர் தர்மேந்திரா, சுரேஷ் குரலில் என்னிடம் பேசினார். பணத்தை திரும்ப கேட்டதால் ஐஸ்வர்யா, அவரது கணவர், தர்மேந்திரா எனக்கு கொலை மிரட்டல் விடுக்கின்றனர்' என்று கூறி இருந்தார்.
இதையடுத்து, மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.