'மாஜி' கவுன்சிலர் கொலை வழக்கில் ரவுடி சுட்டிப்பிடிப்பு
'மாஜி' கவுன்சிலர் கொலை வழக்கில் ரவுடி சுட்டிப்பிடிப்பு
ADDED : செப் 21, 2024 11:08 PM

கலபுரகி: பணத்தகராறில் முன்னாள் கவுன்சிலரை சுட்டுக்கொன்ற வழக்கில், தலைமறைவாக இருந்த ரவுடி சுட்டுப் பிடிக்கப்பட்டார்.
கலபுரகி மாவட்டம், ஆலந்த் கானாபுரா கிராமத்தைச் சேர்ந்தவர் விஸ்வநாத் ஜமாதார், 45. கானாபுரா கிராம பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர். கடந்த 13ம் தேதி கானாபுரா புறநகர் பகுதியில் பைக்கில் சென்றார்.
அப்போது பைக்கை வழிமறித்த, ரவுடி லட்சுமணன் பூஜாரி, 45, விஸ்வநாத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தார். தலைமறைவாக இருந்த அவரை, ஆலந்த் போலீசார் தேடி வந்தனர்.
ஆலந்த் அருகே நிம்பர்கா கிராமத்தில் உள்ள பாழடைந்த வீட்டில், லட்சுமணன் இருப்பது பற்றி, நிம்பர்கா போலீஸ் நிலைய எஸ்.ஐ., இந்துமதிக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
உடனடியாக ஆலந்த் எஸ்.ஐ., சோமலிங்காவுக்கு தகவல் கொடுத்தார். இரு எஸ்.ஐ.,க்கள் தலைமையில், லட்சுமணனை கைது செய்ய போலீசார் சென்றனர். பாழடைந்த வீட்டில் ஒரு அறையில் இருந்த அவரை கைது செய்தனர்.
எஸ்.ஐ., இந்துமதி, லட்சுமணனை பிடித்து வைத்திருந்தார். அப்போது அவரைப் பிடித்து தள்ளிய லட்சுமணன், புதருக்குள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துத் தாக்கினார். இந்துமதியின் கையில் வெட்டு விழுந்தது.
அதிர்ச்சி அடைந்த எஸ்.ஐ., சோமலிங்கா, லட்சுமணனின் வலது காலில் துப்பாக்கியால் சுட்டார். சுருண்டு விழுந்த அவரை, போலீசார் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயமடைந்த எஸ்.ஐ., இந்துமதியும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட விஸ்வநாத்தும் ரவுடி தான். அவரும், லட்சுமணனும் நண்பர்கள் ஆவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, உறவினர் ஒருவரை கொலை செய்ய விஸ்வநாத்தை கூலிப்படையாக லட்சுமணன் ஏவினார். ஐந்து லட்சம் ரூபாய் தருவதாக கூறினார். ஆனால் தரவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் கொலை நடந்ததும் தெரிய வந்துள்ளது.