ரூ.27 கோடி கஞ்சா கடத்தல்: 'மாஜி' சுங்க அதிகாரி கைது
ரூ.27 கோடி கஞ்சா கடத்தல்: 'மாஜி' சுங்க அதிகாரி கைது
ADDED : அக் 30, 2025 08:00 AM

புதுடில்லி: டில்லியில், 27 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'ஹைட்ரோபோனிக் கஞ்சா'வை கடத்திய முன்னாள் சுங்க அதிகாரி கைது செய்யப்பட்டதன் வாயிலாக, வெளிநாடுகளில் இருந்து நடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் கொண்டு வந்து விற்கப்படுவதாக டில்லி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஜனக்புரி பகுதியில் சமீபத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, திரையரங்கம் அருகே ஒரு குழுவினர் போதைப்பொருள் வினியோகம் செய்ததை கண்ட போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர்.
அங்கிருந்த அனைவரும் தப்பிய நிலையில், ரோஹித் குமார் சர்மா, 35, என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர் அளித்த தகவலை அடுத்து, 21 கிலோ எடை கொண்ட, 'ஹைட்ரோபோனிக் மரிஜுவானா' எனப்படும் கடலில் வளர்க்கப்படும் உயர் ரக கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதன் மதிப்பு 27 கோடி ரூபாய். அவரிடம் இருந்த 44.42 லட்சம் ரூபாய், சொகுசு கார், இரு சக்கர வாகனம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
டில்லி போலீஸ் துணை கமிஷனர் சஞ்சீவ் குமார் யாதவ் கூறியதாவது:
பிடிபட்ட ரோஹித் குமார், மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியுள்ளார்.
கேரளாவின் கண்ணுார் விமான நிலையத்தில் 2019ல் பணியாற்றிய போது, தங்கம் கடத்தல் விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்; பணியில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு சென்ற அவர், அபிஷேக் என்பவருடன் இணைந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டார்.
இருவரும் சேர்ந்து, தாய்லாந்து கடற்பகுதியில் வளர்க்கப்படும் உயர் ரக கஞ்சாவை இந்தியாவுக்கு கடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுங்க துறையில் இருந்ததால், கடத்தலை தடுக்கும் வழிமுறைகளை அறிந்த ரோஹித், சோதனை குறைபாடு உள்ள பகுதிகளை தேர்வு செய்து இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
ரோஹித் கூட்டாளி அபிஷேக்கை தேடி வருகிறோம். ரோஹித் கைதை அடுத்து, சர்வதேச அளவிலான போதைப் பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

