வங்கியில் ரூ.122 கோடி முறைகேடு: முன்னாள் பொது மேலாளர் கைது
வங்கியில் ரூ.122 கோடி முறைகேடு: முன்னாள் பொது மேலாளர் கைது
ADDED : பிப் 15, 2025 11:44 PM

மும்பை: மும்பையில் கூட்டுறவு வங்கியில், 122 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதாக வங்கியின் முன்னாள் பொது மேலாளர் கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், 28 கிளைகளுடன் இயங்கும் 'நியு இந்தியா கூட்டுறவு வங்கி' மீது, நிதி முறைகேடு புகார்கள் எழுந்ததை தொடர்ந்து, அந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி முடக்கியது.
வங்கி இயக்குனர்கள் குழுவை, 12 மாதத்துக்கு சஸ்பெண்ட் செய்து, கணக்குகளை ஆய்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய குழுவையும் ரிசர்வ் வங்கி நியமித்தது.
ரிசர்வ் வங்கியின் அதிரடியால் அடுத்த ஆறு மாதத்துக்கு, வங்கியில் இருந்து பணம் எடுக்கவோ, டிபாசிட் செய்யவோ, கடனுதவி பெறவோ முடியாது.
இதனால், மும்பை முழுதும் உள்ள வங்கி கிளைகளில் நேற்று முன்தினம் பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
ஏ.டி.எம்.,களிலும் பணம் எடுக்க முடியாமல் வங்கியின் வாடிக்கையாளர்கள் தவித்து வருகின்றனர். வங்கியோடு தொடர்புடைய கூட்டுறவு வீட்டு வசதி கடன் சங்கங்களும் ஸ்தம்பித்துள்ளன.
இந்நிலையில், நியு இந்தியா கூட்டுறவு வங்கியின் முன்னாள் பொது மேலாளரும், கணக்குத் துறை தலைவருமான ஹிதேஷ் மேத்தா மீது, 122 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக வங்கியின் தலைமை செயல் அதிகாரி தேவர்ஷி ஷிஷிர் குமார் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக தாதர் போலீஸ் ஸ்டேஷனில் அவர் அளித்த புகாரில், ஹிதேஷ் மேத்தாவும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் பொது மேலாளர் ஹிதேஷ் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பின், அந்த வழக்கு, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து, மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு விசாரணைக்காக ஹிதேஷ் மேத்தா அழைத்து வரப்பட்டு கைது செய்யப்பட்டார்.
முடக்கப்பட்டுள்ள நியு இந்தியா கூட்டுறவு வங்கிக்கு மும்பையை தவிர, புனே மற்றும் அண்டை மாநிலமான குஜராத்தின் சூரத்திலும் கிளைகள் உள்ளன.