ADDED : அக் 01, 2025 11:53 PM
வாரணாசி:உத்தர பிரதேசத்தில், சாலையை அகலப்படுத்தும் பணிக்காக முன்னாள் ஹாக்கி வீரரின் வீட்டின் ஒரு பகுதியை, மாவட்ட நிர்வாகம் இடித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யின் வாரணாசியில், கச்சேரி - சந்தாஹா சாலையில் மறைந்த முன்னாள் ஹாக்கி வீரர் முகமது ஷாஹிதின் வீடு அமைந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இவருக்கு, மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித்துள்ளது. இவர், 2016ல் இறந்த நிலையில், அதே பகுதியில் அவரது குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
அவர்கள் வீடு அமைந்துள்ள சாலையை அகலப்படுத்தும் பணியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இதற்காக, முகமது ஷாஹித் வீட்டின் ஒரு பகுதியை, புல்டோசர் வைத்து இடித்தனர். இதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உ.பி., அரசின் இந்த செயலை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதையடுத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தரப்பில், 'சாலையை அகலப்படுத்தும் பணிக்காக, முன்னாள் ஹாக்கி வீரரின் வீட்டின் ஒரு பகுதி மட்டுமே இடிக்கப்பட்டது. எனினும், அதற்குரிய இழப்பீட்டு தொகையை அரசு அவரது குடும்பத்தினரிடம் அளித்துள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அரசின் இழப்பீட்டு தொகை தங்களுக்கு கிடைக்கவில்லை என, முகமது ஷாஹித் குடும்பத்தார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.