ADDED : ஏப் 26, 2025 12:40 AM

புதுடில்லி: 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் முன்னாள் தலைவர் கே.கஸ்துாரிரங்கன், 84, உடல்நலக்குறைவால் நேற்று காலமானார்.
இஸ்ரோ தலைவராக, 1994 - 2003 வரை பணியாற்றியவர் கே.கஸ்துாரிரங்கன். கர்நாடகாவின் பெங்களூரில் வசித்து வந்த அவர், வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக, பெங்களூரில் உள்ள ராமன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நாளை வைக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து இறுதிச் சடங்கு நடக்கிறது.
இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் பயன்பாட்டில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். இவரது பொறுப்பு காலத்தில், 20க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் செயல்படுத்தப்பட்டன. புதிய தேசிய கல்வி கொள்கை வரைவுக் குழுவின் தலைவராக இருந்த கே.கஸ்துாரிரங்கன், ஜவஹர்லால் நேரு பல்கலை வேந்தராகவும், கர்நாடக அறிவு ஆணையத்தின் தலைவராகவும் பணியாற்றி உள்ளார். 2003 - 09 வரை ராஜ்யசபா எம்.பி.,யாகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
இவரது சேவையை பாராட்டி, பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்துள்ளது. கே.கஸ்துாரிரங்கன் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் அறிவியல் மற்றும் கல்விப் பயணத்தில் டாக்டர் கே.கஸ்துாரிரங்கனின் பங்கு அளப்பரியது. அவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவமும், தேசத்திற்கு தன்னலமற்ற பங்களிப்பும் எப்போதும் நினைவுகூரப்படும்.
நரேந்திர மோடி, பிரதமர்

