ADDED : டிச 11, 2024 12:35 AM

பெங்களூரு, கர்நாடக முன்னாள் முதல்வரும், வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா, 92, பெங்களூரில் நேற்று காலமானார்.
சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா என அழைக்கப்படும் எஸ்.எம். கிருஷ்ணா, வயோதிகம் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கர்நாடகாவின் பெங்களூரில் நேற்று அதிகாலை 2:45 மணிக்கு காலமானார்.
அஞ்சலி
கிருஷ்ணாவின் உடல், அவரது சொந்த சட்டசபை தொகுதியான கர்நாடகாவின் மட்டூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நேற்று முதல் நாளை வரை கர்நாடக அரசு துக்கம் அனுஷ்டிக்கிறது. அவரது இறுதி சடங்கு, மாண்டியா மாவட்டத்தில் உள்ள சொந்த ஊரில் முழு அரசு மரியாதையுடன் இன்று நடக்கிறது.
கிருஷ்ணாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் இரங்கல் குறிப்பில், 'குறிப்பிடத்தக்க தலைவரான கிருஷ்ணா அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்டார்.
அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அயராது உழைத்தார்.
'கர்நாடக முதல்வராக இருந்தபோது உட்கட்டமைப்பை வசதியை மேம்படுத்தினார்' என, குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் வாழ்க்கை
எஸ்.எம்.கிருஷ்ணா, மாண்டியா மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளியில், 1932 மே 1ல் பிறந்தார்.சட்டம் பயின்ற இவர், 1962ல் மட்டூர் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு அரசியல் வாழ்க்கையை துவக்கினார்.
பின், காங்கிரசில் இணைந்த கிருஷ்ணா எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., மாநில அமைச்சர், சபாநாயகர், துணை முதல்வர், முதல்வர், லோக்சபா எம்.பி., ராஜ்ய சபா எம்.பி., மத்திய அமைச்சர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
இவர், 1999 அக்., முதல் 2004 மே வரை காங்., சார்பில் கர்நாடக முதல்வராக பதவி வகித்தார்.
அப்போது பெங்களூரு நகர வளர்ச்சிக்கு முக்கியத்துவம் தரப்பட்டது.
இதனால், பெங்களூரில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்கள் துவங்கின. ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. தகவல் தொழில்நுட்ப துறையில் இந்த நகரம் அசுர வளர்ச்சி பெற்றது.
இதுதவிர, 2004 டிச., முதல் 2008 மார்ச் வரை மஹாராஷ்டிரா கவர்னராக கிருஷ்ணா பணியாற்றினார்.
முக்கிய பதவிகள்
மன்மோகன் சிங் தலைமையிலான காங்., ஆட்சியில் 2009 மே முதல் 2012 அக்., வரை வெளியுறவு அமைச்சராகவும் பதவி வகித்தார்.
காங்கிரசில், 50 ஆண்டுகள் பல்வேறு முக்கிய பதவிகள் வகித்த கிருஷ்ணா, கடந்த 2017ல் பா.ஜ.,வில் இணைந்தார். கடந்த 2023 ஜன., 7ல் அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெற்றார்.
காலமான கிருஷ்ணாவுக்கு மனைவி பிரேமா, மாளவிகா, சம்பவி என்ற இரு மகள்கள் உள்ளனர்.