ADDED : ஜன 04, 2025 01:13 AM
கொச்சி : கேரளாவில், 2019ல் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள், எம்.எல்.ஏ., உட்பட 10 பேருக்கு சி.பி.ஐ., நீதிமன்றம் நேற்று தண்டனை அறிவித்தது.
கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது.
இங்குள்ள, காசர்கோடு மாவட்டம் பெரியா என்ற பகுதியில், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரிடையே, அரசியல் பிரச்னையால் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் தாக்கி கொண்டனர். இந்த கலவரத்தில் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான கிரிபேஷ், 19, மற்றும் சரத் லால், 24, ஆகிய இருவர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது.
கொச்சியில் உள்ள சி.பி.ஐ., நீதிமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் 14 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அவர்களில், 10 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான குன்ஹிராமன், கன்னங்காடு பஞ்சாயத்து தலைவர் மணிகண்டன், முன்னாள் மார்க்சிஸ்ட் உறுப்பினர் பீதாம்பரம், கட்சியின் முன்னாள் கிளை செயலர் ராகவன் ஆகிய நால்வருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.