கேரள பா.ஜ., தலைவராகிறார் முன்னாள் மத்திய அமைச்சர்?
கேரள பா.ஜ., தலைவராகிறார் முன்னாள் மத்திய அமைச்சர்?
ADDED : மார் 24, 2025 02:32 AM

திருவனந்தபுரம் : முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், 60, கேரள பா.ஜ., தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். அவர் போட்டியின்றி தேர்வாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கேரளாவில் தொழிலதிபராக இருந்து பின் அரசியலுக்கு வந்தவர் ராஜீவ் சந்திரசேகர். 2006 முதல் 2024 வரை ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார்.
தே.ஜ., கூட்டணி இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்த போது, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சராக ராஜீவ் சந்திரசேகர் பொறுப்பு வகித்தார்.
லோக்சபாவுக்கு கடந்தாண்டு நடந்த தேர்தலில், திருவனந்தபுரம் தொகுதியில் காங்., வேட்பாளர் சசி தரூரை எதிர்த்து போட்டியிட்டார். 16,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தவறவிட்டார்.
தேர்தல் பிரசாரத்தில் மிக கடுமையாக உழைத்து பா.ஜ., மேலிடத்தின் நன்மதிப்பை பெற்றார். இந்நிலையில், அவரை கேரள பா.ஜ., தலைவராக நியமிக்க கட்சி தலைமை முடிவு செய்தது. திருவனந்தபுரத்தில் நேற்று நடந்த பா.ஜ., உயர்மட்ட குழு கூட்டத்தில் ராஜீவ் சந்திரசேகர் பங்கேற்றார்.
அதன் பின், மாநில தலைமையகத்துக்கு சென்று, கட்சி தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரத்தில் இன்று நடக்கவுள்ள பா.ஜ., மாநாட்டில், ராஜீவ் சந்திரசேகர் மாநில தலைவராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.