சென்னையில் 'எச்1பி' விசா மோசடி அமெரிக்க முன்னாள் எம்.பி., பகீர்
சென்னையில் 'எச்1பி' விசா மோசடி அமெரிக்க முன்னாள் எம்.பி., பகீர்
ADDED : நவ 27, 2025 02:44 AM

நியூயார்க்: அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் இந்தியர்களுக்காக மொத்தம் 85,000 'எச்1பி' விசாக்கள் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க துாதரகத்தின் மூலம் 2 லட்சத்து 20,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது என, அந்நாட்டு முன்னாள் எம்.பி., டேவ் பிராட் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது. அதில், 75 சதவீத விசாக்கள் இந்தியர்களுக்கே வழங்கப்படுகின்றன.
இது, அமெரிக்கர்களின் வேலையை பறிப்பதாகக் கூறி, அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப், விசா நடைமுறையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
இந்நிலையில், எச்1பி விசா திட்டத்தில் முறைகேடு நடப்பதாக குடியரசு கட்சி முன்னாள் எம். பி.,யும், பொருளாதார நிபுணருமான டேவ் பிராட் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் .
இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது:
மொத்தமுள்ள எச்1பி விசாக்களில் 71 சதவீதம் இந்தியர்களுக்கே செல்கிறது. சீனர்களுக்கு வெறும் 12 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியாவுக்கான உச்ச வரம்பு 85,000 மட்டுமே.
ஆனால், இந்தியாவின் சென்னை துாதரகம் மூலம் 2 லட்சத்து 20,000 விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அங்கு, ஏதோ தவறு நடக்கிறது என்பதை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
சென்னை துாதரகம் மூலம் தமிழகம், தெலுங்கானா, கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு விசா வழங்கப்படுகிறது.

