ADDED : மார் 18, 2025 05:09 AM
கே.ஆர்.புரம்: தன்னிடம் 300 கோடி அமெரிக்க டாலர் உள்ளது. தங்கம் வியாபாரம் செய்வதாக பெண்ணை நம்ப வைத்து, ௧ கோடி ரூபாய் மோசடி செய்த நால்வர் மீது வழக்குப் பதிவாகிஉள்ளது.
பெங்களூரு, கே.ஆர்.புரத்தின் கித்தகனுார் பிரதான சாலையின், சாயி லே - அவுட்டில் வசிப்பவர் அமராவதி. இவர் தன் வீட்டின் நலனுக்காக, கடந்தாண்டு சாந்தி ஹோம பூஜையை நடத்தினார். இதில் கலந்து கொள்ளும்படி, தனக்கு அறிமுகம் உள்ள கோபால கிருஷ்ணாவை அழைத்திருந்தார்.
பூஜை முடிந்து இரண்டு நாட்களுக்கு பின், தன் நண்பர் ராகேஷ்ரெட்டி, ரூபா, யஷ்வந்த்குமார் ஆகியோருடன், அமராவதியின் வீட்டுக்கு கோபாலகிருஷ்ணா வந்திருந்தார்.
அப்போது அவர், 'எங்களிடம் 300 கோடி அமெரிக்க டாலர் உள்ளது. வெளிநாட்டில் இருந்து தங்கம் வரவழைத்து, கிலோ கணக்கில் வியாபாரம் செய்கிறோம். எங்களிடம் ஒரு கிராம் தங்கம் 4,000 ரூபாய்க்கு கிடைக்கும்' என கூறினர்.
அமராவதி மற்றும் அவரது மகன் கண் முன்னால், தங்க பிஸ்கட்டுகளை நகைக்கடை ஒன்றில் விற்று பணம் வாங்கினர். பணம் கொடுத்தால் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக, ஆசை காண்பித்தனர்.
இதை நம்பிய அமராவதி, தன்னிடம் இருந்த பணம் உட்பட தெரிந்தவர்களிடம் வாங்கியும் ௧ கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை கோபாலகிருஷ்ணாவிடம் கொடுத்தார்.
நீண்ட நாட்களாகியும், தங்கம் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இது பற்றி கேட்டதற்கு, 'எங்களுக்கு வந்த தங்கம், கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டுள்ளது' என, கூறி காலம் கடத்தினர்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமராவதி, சி.சி.பி., போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின்படி, ராகேஷ்ரெட்டி, கோபால கிருஷ்ணா, ரூபா, யஷ்வந்த் குமார் மீது, வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.