'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையா உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள்!: கோர்ட்டில் லோக் ஆயுக்தா அறிக்கை தாக்கல்
'முடா' வழக்கில் முதல்வர் சித்தராமையா உட்பட 4 பேரும் குற்றமற்றவர்கள்!: கோர்ட்டில் லோக் ஆயுக்தா அறிக்கை தாக்கல்
ADDED : பிப் 21, 2025 05:30 AM

'முடா' எனும், மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், பயனாளிகளுக்கு 50க்கு 50 திட்டத்தின் கீழ், வீட்டுமனை ஒதுக்கியதில் 5,000 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், முதல்வர் சித்தராமையா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, மனைவி பார்வதிக்கு 56 கோடி ரூபாய் மதிப்பிலான 14 வீட்டு மனைகளை முடாவிடம் இருந்து வாங்கி கொடுத்ததாகவும் கூறப்பட்டது.
மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா அளித்த புகாரில், முதல்வரிடம் விசாரணை நடத்த கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்தார். அதுபோன்று முதல்வரிடம், மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்திலும் சிநேகமயி கிருஷ்ணா வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு
மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற உத்தரவின்படி, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சாமி, நில உரிமையாளர் தேவராஜ் ஆகியோர் மீது மைசூரு லோக் ஆயுக்தா போலீசார், கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். மூன்று மாதத்திற்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, முடா தனக்கு வழங்கிய 14 வீட்டுமனைகளை, முதல்வரின் மனைவி பார்வதி முடாவுக்கே திருப்பி கொடுத்தார். ஆனாலும் வழக்கு குறித்து, லோக் ஆயுக்தா விசாரித்தது. சித்தராமையா, பார்வதி, மல்லிகார்ஜுன் சாமி, தேவராஜ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நான்கு பேரும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
நோட்டீஸ்
முதல்வரின் மனைவிக்கு முடா கொடுத்த நிலத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த நடைமுறைகளின் போது புகார்தாரர் சிநேகமயி கிருஷ்ணாவும் உடன் இருந்தார். இதற்கிடையில் லோக் ஆயுக்தா போலீசார், வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்றும், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற கோரியும், உயர் நீதிமன்றத்தில் சிநேகமயி கிருஷ்ணா மனு செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, 'சி.பி.ஐ., விசாரணை தேவை இல்லை' என்று தீர்ப்பு கூறினார். இதன்மூலம் முதல்வர் ஓரளவு நிம்மதி அடைந்தார்.
இந்நிலையில், 14 வீட்டுமனைகள் வாங்கியதில் சித்தராமையா, பார்வதி உட்பட நான்கு பேரும் எந்த தவறும் செய்யவில்லை என்று, லோக் ஆயுக்தா போலீசார் நீதிமன்றத்தில், 'பி' அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக, கடந்த மாதமே தகவல் வெளியானது. நேற்று முன்தினம் அது உறுதியானது.
புகார்தாரர் சிநேகமயி கிருஷ்ணாவுக்கு, லோக் ஆயுக்தா போலீசார் அனுப்பிய நோட்டீசில், 'முடா வழக்கில் முதல்வர் உட்பட நான்கு பேர் மீதும், நீதிமன்றத்தில், 'பி' அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம்.
உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் நீதிமன்றத்தில் தெரிவித்து கொள்ளலாம்' என்று கூறப்பட்டு இருந்தது.
நிம்மதி
இந்நிலையில், நேற்று காலை 11:00 மணிக்கு, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி சந்தோஷ் கஜானா பட் முன்பு, வழக்கின் விசாரணை அதிகாரியான மைசூரு லோக் ஆயுக்தா எஸ்.பி., யுதேஷ் 11,300 பக்கங்கள் கொண்ட, விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில், 50க்கும் மேற்பட்ட சாட்சிகளின் வாக்குமூலம் இடம் பெற்று உள்ளது.
அதில், 'முதல்வரும், அவரது குடும்பத்தினரும் சட்டவிரோதமாக 14 வீட்டுமனைகளை வாங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. வழக்கில் அவர்கள் குற்றமற்றவர்கள். அதிகாரிகள் தான் முழுக்க, முழுக்க தவறு செய்துள்ளனர்.
முதல்வர் மனைவிக்கு கிடைத்த 14 வீட்டுமனைகளும் சட்டத்திற்கு உட்பட்டே கிடைத்துள்ளன. 'குறிப்பிட்ட இடத்தில் தான் வீட்டுமனை வேண்டும் என்று கேட்கவில்லை. அதிகாரிகள் அலட்சியத்தால் முடாவில் பெரும் முறைகேடு நடந்து உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்த வேண்டும்' என்பது உட்பட பல விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த அறிக்கையால், முதல்வர் தற்காலிக நிம்மதி அடைந்து உள்ளார். இந்த அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால், சித்தராமையாவுக்கு முழு நிம்மதி கிடைக்கும்.
ஆனால், அறிக்கையில் ஏதாவது குறைபாடுகளை கண்டுபிடித்து, சரியாக விசாரிக்கவில்லை, மறுவிசாரணை நடத்துங்கள் என்று நீதிபதி உத்தரவிட்டால், சித்தராமையாவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்படும்.
இதற்கிடையில், அமலாக்க துறையும் இந்த வழக்கில் தனியாக விசாரணை நடத்துகிறது. அந்த வழக்கிலும், இதுபோன்ற சாதகமான முடிவு வருமா என்பது கேள்விக்குறிதான்.