ADDED : பிப் 18, 2025 03:02 AM

மைசூரு : கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வந்தவர் சேத்தன், 46. இவரது மனைவி ரூபாலி, 42, மகன் குஷால், 16, சேத்தனின் தாய் பிரியம்வதா, 65. சேத்தன், தொழிலாளர்களை, மேற்காசிய நாடான சவுதி அரேபியாவுக்கு அனுப்பி வைக்கும் ஏஜன்டாக இருந்தார்.
ஏற்கனவே ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வாங்கிய இரு வீடுகளுக்கு தவணை கட்ட முடியாமல் அவதிப்பட்டார்.
இதில் இருந்து மீள முடியாததால், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள சேத்தன் முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு, அமெரிக்காவில் உள்ள தன் சகோதரருக்கு மொபைல் போனில் பேசி, தற்கொலை செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தன் உறவினர்கள் மற்றும் ரூபாலியின் பெற்றோருக்கு தகவல் அளித்தார்.
அவர்கள் நேற்று அதிகாலை வந்து பார்த்தபோது, சேத்தன் துாக்கிலும், மற்றவர்கள் தரையிலும் சடலங்களாக கிடந்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடன் தொல்லையால் அவதிப்பட்ட சேத்தன், தாய், மனைவி, மகனுக்கு விஷம் கொடுத்து அவர்களை கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மைசூரு போலீஸ் கமிஷனர் சீமா லட்கர் கூறுகையில், ''மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள சேத்தன், திருமணத்துக்கு பின் ரியாத்தில் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார். கொரோனா காலகட்டத்தில் மீண்டும் மைசூரு திரும்பினார்.
''குடும்பத்தினர் அனைவரும், மைசூரு அரவிந்த் நகரில் உள்ள ரூபாலியின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்று மதிய உணவு சாப்பிட்டுள்ளனர்.
''அதன்பின், ஹாசன் மாவட்டம், கோரூரில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து திரும்பியுள்ளனர். இரவில் தற்கொலை செய்துள்ளனர்,'' என்றார்.

