ADDED : மே 07, 2025 12:11 AM

ஆமதாபாத்: குஜராத்தில் வக்ப் வாரியத்துக்கு சொந்தமான சொத்துக்களில் கடை, வீடுகளை கட்டி, 15 ஆண்டுகளாக வாடகை வசூல் செய்து, 100 கோடி ரூபாய் அளவுக்கு பணமோசடி செய்த வழக்கில், ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை நேற்று பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
குஜராத் மாநிலம் ஆமதாபாதில் வக்ப் சொத்துக்களை, 'கஞ்ச் கி மஸ்ஜித்' மற்றும் 'ஷா படா காசம்'ஆகிய அறக்கட்டளைகள் நிர்வகித்து வருகின்றன. போலி ஆவணங்கள் பயன்படுத்தி, இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களான சிலர், 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக ஆமதாபாத் போலீசில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில், அறக்கட்டளையின் போலி உறுப்பினர்கள் சலீம் கான் பதான், மெஹ்மூத் கான் பதான் உட்பட ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பணமோசடி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில், ஆமதாபாதின் ஜமால்பூர் பகுதியில் உள்ள கஞ்ச் கி மஸ்ஜித்துக்கு சொந்தமான இடத்தில், போலி அறக்கட்டளை உறுப்பினர்கள், 2008 முதல் இதுவரை 200 வீடுகளும், 30 கடைகளும் சட்டவிரோதமாக கட்டியது தெரிந்தது.
அந்த இடத்தின் வாடகைதாரர்களிடம் இருந்து ஆண்டுக்கு பல கோடி ரூபாய் என, இதுவரை 100 கோடி ரூபாய் அளவுக்கு வாடகை வசூலித்துள்ளனர்.
அவற்றை அறக்கட்டளையில் சேர்க்காமல் சொந்த வங்கி கணக்குகளுக்கு மாற்றி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வக்ப் சொத்துக்களில் முறைகேட்டில் ஈடுபட்ட ஐந்து பேருக்கு சொந்தமான, 10க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.