முதிய தம்பதியை 'டிஜிட்டல்' கைது செய்து ரூ.2.40 கோடி சுருட்டிய மோசடி கும்பல்
முதிய தம்பதியை 'டிஜிட்டல்' கைது செய்து ரூ.2.40 கோடி சுருட்டிய மோசடி கும்பல்
UPDATED : ஆக 29, 2025 10:45 AM
ADDED : ஆக 29, 2025 05:54 AM

காசர்கோடு: கேரளாவில் முதிய தம்பதியை, 'டிஜிட்டல்' கைது செய்துள்ளதாக மிரட்டிய மோசடி கும்பல், அவர்களிடம் இருந்து, 'ஆன்லைன்' வாயிலாக, 2.40 கோடி ரூபாயை சுருட்டியது.
கேரளாவின் காசர்கோடு மாவட்டம் கங்ஹன்காடு பகுதியில், 69 வயதான ஓய்வு பெற்ற ஆசிரியர், தன் மனைவியுடன் வசித்து வருகிறார். அவர் அரசு டாக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். உடல்நலம் குன்றிய இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 10ம் தேதி டாக்டரின் மொபைல் போனுக்கு வந்த அழைப்புக்கு கணவர் பதில் அளித்தார். மறுமுனையில் பேசிய நபர் தொலைத்தொடர்பு துறையில் இருந்து பேசுவதாக கூறினார்.
உங்களுக்கு பண மோசடியில் தொடர்பு இருப்பதாக கூறிய அவர், இது குறித்து சி.பி.ஐ., அதிகாரி உங்களிடம் போனில் விசாரிப்பார் என தெரிவித்தார். தொடர்ந்து போலீஸ் உடையணிந்த நபர் வீடியோ காலில் டாக்டர் தம்பதியிடம் பேசினார். அப்போது பண மோசடி செய்ததாக கூறி முதிய தம்பதியை டிஜிட்டல் கைது செய்து உள்ளதாக கூறியுள்ளார்.
டாக்டரின் ஆதார் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் சிலவற்றை தெளிவற்ற முறையில் காட்டியுள்ளார். இதை உண்மை என நம்பி, எப்போதும் வீடியோ அழைப்பிலேயே அந்த தம்பதி இருந்துள்ளனர்.
இதையடுத்து கடந்த 12ம் தேதி, பணமோசடி விசாரணை மும்பையில் உள்ள சி.பி.ஐ., கோர்ட்டில் நடப்பதாக கூறியவர்கள், நீதிபதி கோர்ட்டுக்கு வருவதாக கூறி எழுந்து நிற்குமாறு அந்த தம்பதியை, 'வாட்ஸாப்' அழைப்பில் மோசடி கும்பல் மிரட்டியுள்ளது.
மேலும் வங்கி கணக்குகளை சோதனையிட வேண்டும் என்று நீதிபதி கூறியதும், முதிய தம்பதி வங்கி கணக்கில் இருந்த பணத்தை மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர். இவ்வாறு, 11 நாட்கள் அந்த தம்பதி டிஜிட்டல் கைது செய்யப்பட்டிருந்தனர். அப்போது, 2.40 கோடி ரூபாயை தம்பதி கணக்கில் இருந்து மோசடி கும்பல் வங்கி கணக்குக்கு மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் டாக்டர் வீட்டுக்கு வந்த உறவினர் டிஜிட்டல் கைது என்பது மோசடி என கூறிய பின், காசர்கோடு சைபர் பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.தொடர்ந்து வங்கி கணக்கை முடக்கி சோதனையிட்டபோது அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கில், 55 லட்சம் ரூபாய் இருப்பது தெரியவந்தது. அதை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.