நடிகை சன்னி லியோன் பெயரில் மகளிர் உதவித்தொகை பெற்று மோசடி
நடிகை சன்னி லியோன் பெயரில் மகளிர் உதவித்தொகை பெற்று மோசடி
ADDED : டிச 24, 2024 03:38 AM

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில், திருமணமான பெண்களுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் உதவித் தொகையை, நடிகை சன்னி லியோன் பெயரில் மோசடியாக வங்கிக் கணக்கு துவக்கி மாதந்தோறும் பெற்று வந்த நபர் பிடிபட்டார்.
வங்கி கணக்கு
இம்மாநிலத்தில், திருமணமான பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உதவித் தொகையை அரசு அளித்து வருகிறது.
இந்த தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
பஸ்தார் மாவட்டம், தாலுர் என்ற கிராமத்தில் உள்ள வங்கியில், சன்னி லியோன் என்ற பெயரில் உள்ள கணக்குக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கப்படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
கவர்ச்சி படங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழ் பெற்றவர் நடிகை சன்னி லியோன்.
இந்த பெயரில் தாலுர் கிராமத்தில் ஒருவர் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியதால், அந்த வங்கிக் கணக்கை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அந்த கணக்கு வீரேந்திர ஜோஷி என்பவரால் துவங்கப்பட்டு, தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது கண்டுபிடிக்கப் பட்டது.
அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தகுதியான பயனாளிகளை சரிபார்க்கும் பொறுப்புள்ள அதிகாரிகளையும் கண்டறியும் பணி நடந்து வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தும்படியும், அந்த வங்கிக் கணக்கை முடக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கு மாவட்ட கலெக்டர் ஹாரிஸ் உத்தரவிட்டுள்ளார்.
பொறாமை
இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் தீபக் பைஜ் கூறுகையில், “திருமணமான பெண்களுக்கான உதவித்தொகை பெறுவோர் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 50 சதவீத கணக்குகள் போலியானவை,” என்றார்.
முந்தைய காங்கிரஸ் அரசால் இத்திட்டத்தை செயல்படுத்த முடியாததால், பொறாமையில் புலம்புவதாக துணை முதல்வர் அருண் சாவோ தெரிவித்துள்ளார்.