ADDED : நவ 02, 2024 12:52 AM

ஸ்ரீகாகுளம்: ஆந்திராவில் இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் 'தீபம் - 2' என்ற திட்டத்தை, மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று துவக்கி வைத்தார்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இதன்படி, தெலுங்கு தேசம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் அத்திட்டத்தை 'தீபம் - 2' என்ற பெயரில் ஆந்திர அரசு நேற்று அமல்படுத்தியது. இதை, ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் ஏடுபுரம் கிராமத்தில் உள்ள பெண் பயனாளி ஒருவரின் வீட்டில், சமையல் அடுப்பை ஏற்றிவைத்து முதல்வர் சந்திரபாபு நாயுடு இத்திட்டத்தை துவக்கி வைத்து, தேநீர் தயாரித்து அனைவருக்கும் வழங்கினார்.
இந்த திட்டத்திற்காக மாநில அரசுக்கு 2,684 கோடி ரூபாய் செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.