அயோத்திக்கு சத்தீஸ்கர் மக்கள் இலவச ரயில் பயணம்: அரசு ஏற்பாடு
அயோத்திக்கு சத்தீஸ்கர் மக்கள் இலவச ரயில் பயணம்: அரசு ஏற்பாடு
UPDATED : ஜன 12, 2024 05:18 PM
ADDED : ஜன 12, 2024 01:50 AM

அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கான இலவச ரயில் பயண திட்டத்துக்கு, சத்தீஸ்கர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சத்தீஸ்கரில், முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலை தரிசிக்க வாரந்தோறும் இலவச ரயில் பயண திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்தின்படி, ஆண்டுதோறும் 20,000 பக்தர்கள் ரயில் வாயிலாக இலவசமாக அயோத்தி அழைத்து செல்லப்பட உள்ளனர். இத்திட்டத்தில், 18 முதல் 75 வயது வரையுள்ள, மருத்துவ ரீதியாக உடல் தகுதி பெற்றவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
பக்தர்களை தேர்வு செய்ய, ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்காக, ரயில்வே மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த இலவச பயணத்தின் போது அயோத்தி ராமர் கோவில் மட்டுமின்றி, வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் பக்தர்கள் அழைத்து செல்லப்படுவர். அங்கு, கங்கா ஆரத்தியில் அவர்கள் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, ராஜஸ்தானில் இருந்து, 2,100 டிரம்களில் சமையல் எண்ணெய் அயோத்திக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதை, பா.ஜ.,வைச் சேர்ந்த ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த எண்ணெயை பயன்படுத்தி அயோத்தியில் உள்ள சீதாதேவி சமையலறையில், வரும் 22ம் தேதி சமைக்கப்பட உள்ள உணவு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளது.