சட்டசபையில் 'ரம்மி' விளையாடிய அமைச்சர் விளையாட்டு துறைக்கு மாற்றம்
சட்டசபையில் 'ரம்மி' விளையாடிய அமைச்சர் விளையாட்டு துறைக்கு மாற்றம்
ADDED : ஆக 02, 2025 01:33 AM

மும்பை : மஹாராஷ்டிரா சட்டசபையில், 'ஆன்லைன் ரம்மி' விளையாடி சர்ச்சையில் சிக்கிய அமைச்சரிடம் இருந்து வேளாண் துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில், தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த மாணிக்ராவ் கோகடே, வேளாண் துறை அமைச் சராக இருந்தார்.
இவர், மழைக்கால கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது, சட்டசபையில் மொபைல் போன் வாயிலாக, ஆன்லைன் ரம்மி விளையாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியானதால், எதிர்க்கட்சியினர் கொந்தளித்தனர்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர், சபை இடைவேளையில் சட்ட சபை நிகழ்வுகளை பார்க்க, 'யு டியூப்' தளத்திற்கு சென்றதாக கூறினார். அப்போது திடீரென்று, 'ஜங்கிலி ரம்மி' என்ற ஆன்லைன் விளையாட்டு திரையில் தோன்றியதாகவும், உடனே அதை தவிர்த்து விட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
அது மட்டுமில்லாமல், சில மாதங்களுக்கு முன் விவசாயிகளை பிச்சைக்காரர்களுடன் அவர் ஒப்பிட்டு பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது. 'விவசாயிகள் மீது அக்கறை இல்லாதவருக்கு அந்த துறையா?' என, பலரும் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில், அமைச்சர் மாணிக்ராவிடம் இருந்த வேளாண் துறை பறிக்கப்பட்டு, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.