தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/கடுமையான விதிகளால் நம் நாட்டின் சுற்றுலா துறை... முடக்கம்!ஹோட்டல்களுக்கான விதிகளை தளர்த்த கோரிக்கை

கடுமையான விதிகளால் நம் நாட்டின் சுற்றுலா துறை... முடக்கம்!ஹோட்டல்களுக்கான விதிகளை தளர்த்த கோரிக்கை

கடுமையான விதிகளால் நம் நாட்டின் சுற்றுலா துறை... முடக்கம்!ஹோட்டல்களுக்கான விதிகளை தளர்த்த கோரிக்கை


UPDATED : ஜூலை 04, 2026 06:09 PM

ADDED : ஜூலை 04, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2026 06:09 PM ADDED : ஜூலை 04, 2026 06:00 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

-நமது சிறப்பு நிருபர்-

நம் நாட்டில், அபரிமிதமான சுற்றுலா வாய்ப்புகள் இருந்தும், கடுமையான விதிமுறைகள், முடிவெடுப்பதில் தாமதம் உள்ளிட்ட நடைமுறைகளால், சுற்றுலா துறை பெரும் பின்னடைவை சந்தித்து வருவதாக நிடி ஆயோக் கவலை தெரிவித்துள்ளது. 'சுற்றுலா துறையை மேம்படுத்தி லாபம் கொழிக்கும் தொழிலாக மாற்ற, ஹோட்டல்களுக்கான திட்ட அனுமதிகள், உரிமங்கள் ஆகியவற்றை ஒற்றை சாளர முறையில் வழங்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு நிடி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

வடக்கே பனி சூழ்ந்த மலைகள், கிழக்கே பசுமை கொஞ்சும் புல்வெளிகள், மேற்கே அழகிய கடல் பரப்புகள், தெற்கே கட்டட கலைக்கு பெயர் போன கோவில்கள் என அனைத்து விதமான சுற்றுலா பிரியர்களுக்கும் தேவையான இயற்கை வளங்கள் நம் நாட்டில் அபரிமிதமாக கொட்டி கிடக்கின்றன.

எனினும், நம் அண்டை நாடான தாய்லாந்து, மேற்காசிய நாடுகளான துருக்கி மற்றும் துபாய் சுற்றுலா துறையில் அதிக வருமானம் ஈட்டி வருகின்றன.

இதற்கு சுற்றுலா துறையின் முதுகெலும்பாக இருக்கும் ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் இருக்கும் அதிகப்படியான அனுமதி நடைமுறைகளே காரணம் என தெரியவந்துள்ளது.

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் நிடி ஆயோக் உறுப்பனர் கவுபா ஆகியோர், நாட்டின் சுற்றுலா தேவைகள் எதிர்பார்த்த அளவுக்கு பூர்த்தி செய்யப்படவில்லை என்ற கவலையை வெளிப்படுத்தி உள்ளனர்.

'சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வெளி கொண்டு வருதல்' என்ற தலைப்பில் நிடி ஆயோக் நேற்று முன்தினம் 104 பக்க அறிக்கையை வெளியிட்டது. அதில், சுற்றுலா துறையின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள நடைமுறை சிக்கல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையை வெளியிட்டு மத்திய சுற்றுலா துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியதாவது:

அரசியலுக்கு வரும் முன் நான் ஹோட்டல் தொழிலில் ஈடுபட்டு இருந்தேன். ஹோட்டல் தொழிலை தொடங்க வேண்டுமெனில், அதற்கு 30 முதல் 35 உரிமங்கள், தடையில்லா சான்றிதழ்கள் மற்றும் அனுமதிகள் பெற வேண்டி இருக்கிறது.

இந்த நடைமுறை சிக்கல் காரணமாக, அனைத்து அனுமதிகளையும் பெற நீண்ட காலம் பிடிக்கிறது. இதற்காக பல கோடி ரூபாய் முதலீடு செய்த பிறகும், ஹோட்டல்களை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவதில்லை. இதனால், ஹோட்டல் தொழிலுக்கு வரும் முதலீட்டாளர்கள் ஆரம்பத்திலேயே ஆர்வம் இழந்து விடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து சுற்றுலா துறையை மேம்படுத்த, அரசு மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை நிடி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

அதன் விபரம்:

* திட்ட அனுமதி ரத்து: மத்திய சுற்றுலா அமைச்சகத்தால் வழங்கப்படும் ஆரம்பகட்ட திட்ட நிலை அனுமதியை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும்

* ஒற்றை சாளர உரிமம்: உணவகம், சலவை, அழகு நிலையம் என ஹோட்டல்களில் உள்ள ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியாக உரிமம் பெறும் முறையை ஒழித்து கட்ட வேண்டும். ஒட்டுமொத்த வளாகத்திற்கும் ஒரே சுகாதார வர்த்தக உரிமம் வழங்க வேண்டும்

* மதுபான உரிமம்: ஒரே ஹோட்டல் வளாகத்திற்குள் வெவ்வேறு பகுதிகளில் மதுபானம் பரிமாறுவதற்கு தனித்தனி உரிமங்கள் கோருவதற்கு பதிலாக ஒரே உரிமம் என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும்

* 'ஹோம்ஸ்டே' தளர்வுகள்: நாடு முழுதும் தற்போது 26,219 பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்களும், 4,925 'ஹோம்ஸ்டே' எனப்படும் தங்கும் விடுதிகள் உள்ளன. இதில் தங்கும் விடுதிகள் தொடங்க மட்டும் ஐந்து தடையில்லா சான்றிதழ்கள், 11 இணக்க விதிமுறைகள் இருக்கின்றன. இதனை தளர்த்த வேண்டும்

* உச்சவரம்பு: தங்கும் விடுதிகளில் தற்போதைய ஆறு அறைகள் என்ற உச்ச வரம்பை, ஒன்பது அறைகளாக உயர்த்த வேண்டும்

* தங்கும் விடுதி பதிவின்போது உள்ளாட்சி அமைப்புகளிடம் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும் என்ற விதியை நீக்க வேண்டும்

இதர பரிந்துரைகள்:

* வாகன மறுபதிவு விதி மாற்றம்: மோட்டார் வாகனச் சட்டம், 1988 பிரிவு 47-இன் படி, வெளிமாநில வாகனங்கள் 60 நாட்களுக்கு மேல் தொடர்ந்து இருந்தால் மீண்டும் வரி செலுத்த வேண்டும் என்ற விதி உள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி சொந்த மாநிலம் திரும்ப வேண்டி உள்ளதால், இந்த விதியைத் தளர்த்த வேண்டும்

* கடலோர குழு: கடலோரப் பகுதிகளில் அமையும் ஹோட்டல்களுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்க மாநில அளவில் பிரத்யேக 'நிபுணர் மதிப்பீட்டுக் குழு' அமைக்கப்பட வேண்டும்.

* மூலதனக் கட்டுப்பாடு நீக்கம்: தமிழகம், ராஜஸ்தான், மேகாலயா போன்ற மாநிலங்களில் சுற்றுலா முகவராக பதிவு செய்ய 50,000 முதல் 4 லட்சம் ரூபாய் வரை குறைந்தபட்ச மூலதனம் தேவைப்படுகிறது. இந்த மூலதன வரம்பையும், கல்வித் தகுதி நிபந்தனையையும் நீக்க வேண்டும்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா துறை என்பது அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் அன்னியச் செலாவணியை ஈட்டித் தரும் முக்கியத் துறை என்பதால், இந்தச் சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நிடி ஆயோக் வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்திற்கு பாராட்டு டில்லி மற்றும் மும்பையில் கட்டுமான அனுமதி பெற வேண்டுமெனில், 24 முதல் 44 வழிமுறைகளை கடக்க வேண்டி இருக்கிறது. இதற்காக 195 நாள் வரை காத்திருக்க வேண்டும். ஆனால், தமிழகம் இதற்கு முன்னோடியாக திகழ்கிறது. சி.எம்.டி.ஏ., எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் ஆன்லைன் திட்ட அனுமதி விண்ணப்ப முறையால், ஹோட்டல் முதலீட்டாளர்களுக்கு அனுமதி பெறுவது விரைவாக நடக்கிறது. வனத்துறை, பொதுப்பணிதுறை தெற்கு ரயில்வே, மெட்ரோ ரயில் உட்பட 10 துறைகளின் தடையில்லா சான்றிதழ்கள் இதிலேயே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு மட்டும் 792 ஆன்லைன் அனுமதிகளை சி.எம்.டி.ஏ., வழங்கி இருக்கிறது.



சர்வதேச அரங்கில் இந்தியா * உலகளாவிய சர்வதேச சுற்றுலாப் பயணியர் வருகையில் நம் நாட்டின் பங்களிப்பு 1.5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இது தாய்லாந்து, மலேஷியா, வியட்நாம் போன்ற அண்டை நாடுகளை விட மிகக் குறைவு. * கடந்த 2024ம் ஆண்டில் நாட்டின் சர்வதேச சுற்றுலா வருவாய் 3.33 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவே துருக்கி, 5.36 லட்சம் கோடி ரூபாய், சவுதி அரேபியா, 4 லட்சம் கோடி ரூபாயை ஈட்டி இருந்தன. * கொரோனா காலத்திற்கு முந்தைய நிலையை விட, தற்போது நம் நாட்டினரின் வெளிநாட்டு சுற்றுலா செலவினங்கள் 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது உள்நாட்டு சுற்றுலாவை விட, வெளிநாட்டு சுற்றுலாவுக்கே நம் நாட்டினர் அதிக ஆர்வம் செலுத்துகின்றனர் என்பதை காட்டுகிறது.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us