'ட்ரீட்' தர மறுத்த 16 வயது சிறுவனை குத்தி கொன்ற நண்பர்கள்
'ட்ரீட்' தர மறுத்த 16 வயது சிறுவனை குத்தி கொன்ற நண்பர்கள்
ADDED : செப் 25, 2024 05:51 AM

புதுடில்லி : டில்லியில், புதிதாக வாங்கிய மொபைல் போனுக்கு, 'ட்ரீட்' தர மறுத்த சிறுவனை, அவனது நண்பர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்கு டில்லி மாவட்டத்தில் உள்ள ஷகர்பூர் என்ற பகுதியைச் சேர்ந்த, சச்சின் என்ற 16 வயது சிறுவன், சமீபத்தில் புதிதாக மொபைல் போன் வாங்கினான். இதற்கு ட்ரீட் தரும்படி அவனது நண்பர்கள் மூன்று பேர் கேட்டனர். ஆனால், சச்சின் மறுத்தான். இது தொடர்பாக, சச்சினுக்கும், அவனது நண்பர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நண்பர்கள், மறைத்து வைத்திருந்த கத்தியால், சச்சினை சரமாரியாக குத்தினர்.
படுகாயமடைந்த சச்சினை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். ஷகர்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், இந்த சம்பவம் குறித்து அறிந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில், சச்சினை குத்திக் கொன்ற மூன்று சிறுவர்களை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.