2026-27 மத்திய பட்ஜெட் முதல் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,01)!
2026-27 மத்திய பட்ஜெட் முதல் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணம் வரை; இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்.,01)!
UPDATED : பிப் 01, 2026 05:39 PM
ADDED : பிப் 01, 2026 07:57 AM

நமது நிருபர்
தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 01) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?
அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.
* 2026 - 27ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் இன்று காலை 11:00 மணிக்கு தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த ஒன்பதாவது பட்ஜெட். இதன் மூலம், தொடர்ச்சியாக ஒன்பது மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றார்.
* தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாமில், ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், இந்த மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் சிறப்பு திட்டங்கள், நிதி தொகுப்புகள் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தலை மனதில் வைத்து எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.
* பஞ்சாபில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அங்குள்ள தலித் ஓட்டுகளை கவர பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, பிரதமர் நரேந்திர மோடி இன்று பஞ்சாப் சென்றார். ஆதம்பூரில் உள்ள விமான நிலையத்துக்கு 'ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜி' யின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று மோடி திறந்து வைத்தார்.
* தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன், அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார்.
* மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், விடுமுறை நாளான இன்று (பிப்ரவரி 01) 26 ஆண்டுகளுக்கு பின் பங்குச்சந்தை வழக்கம் போல் இயங்கியது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு பங்குச் சந்தைகள் சரிந்தன.
* சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 'தமிழ்நாடு தலைகுனியாது' என்ற தேர்தல் பிரசாரத்தை திமுக இன்று தொடங்கியது. 22 நட்சத்திர பேச்சாளர்கள் 234 தொகுதிகளில் பிரசாரம் நடத்த உள்ளனர்.
* ஜிஎஸ்டி வரி வசூல் விபரம் மாதம் 1ம் தேதி வெளியாவது வழக்கம். அதன்படி கடந்த ஜனவரி மாதம் வசூலான ஜிஎஸ்டி விபரம் இன்று வெளியானது. ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 384 கோடி வசூல் ஆகியுள்ளது. இது, முந்தைய ஆண்டு ஜனவரி மாதத்தை காட்டிலும் 6 சதவீதம் அதிகம்.

