ADDED : டிச 18, 2025 01:48 AM
சபரிமலை: சபரிமலையில் டிராக்டர் மோதி காயமடைந்த பக்தர்களுக்கு திருவிதாங்கூர் தேவசம்போர்டு நிவாரணம் வழங்கியது.
பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பொருட்கள் கொண்டு வருவதற்கும் சன்னிதானத்தில் குப்பைகளை எடுத்து செல்வதற்கும் டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. டிராக்டர்கள் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலும் தவிர்க்க முடியாத நிலை உள்ளது. இதனால் டிராக்டர் வேகத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி வேகமாக செல்கின்றனர்.
டிச.,14ல் மழை பெய்து கொண்டிருந்த போது பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாடு இழந்த ஒரு டிராக்டர் பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது. இதில் எட்டு பக்தர்கள் காயமடைந்தனர். அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சையில் உள்ள ஆந்திராவைச் சேர்ந்த லேகாவு சுனிதா, இடுக்கி பாம்பாடும்பாறையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு 25 ஆயிரம் ரூபாயும், கோன்னி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமணிக்கு 10 ஆயிரம் ரூபாயும், சாதாரண காயமடைந்த பிற பக்தர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு வழங்கியது.

