மணிப்பூர் கலவரத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் அட்டகாசம்
மணிப்பூர் கலவரத்தை பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல் அட்டகாசம்
ADDED : அக் 13, 2024 04:21 AM

இம்பால் : மணிப்பூரில் கலவரத்தைப் பயன்படுத்தி தொழிலதிபர்கள், கல்வி நிறுவன உரிமையாளர்கள் உட்பட பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிடிக்க சிறப்புப் பிரிவை அந்த மாநில போலீசார் உருவாக்கியுள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கூகி - மெய்டி பழங்குடியின சமூகத்தினரிடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் வெடித்தது. இது கலவரமாக மாறி 10 மாதங்களுக்கு மேலாக நீடித்தது.
அவ்வப்போது ஆயுத மேந்திய போராளிகள் குழு, ஒரு சில மாவட்டங்களில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இதுபோன்ற சமயங்களில் போலீஸ் ஸ்டேஷன்கள் சூறையாடப்பட்டு, அங்குள்ள ஆயுதங்கள் கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் ஆயுதங்கள், துப்பாக்கிகள் உள்ளிட்டவை பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் துவங்கிய கடந்த ஆண்டு மே முதல், பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த கும்பலை பிடிக்க தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐ.ஜி., கபீப் கூறியதாவது:
நெடுஞ்சாலைகளில், ஓடும் லாரிகளில் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிக்கப்படுகிறது. நன்கொடை என்ற போர்வையில் வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை துன்புறுத்தி, மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் மர்ம கும்பல் ஈடுபடுகிறது.
இது குறித்து கண்காணிக்க சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., தலைமையில் அனைத்து மண்டல ஐ.ஜி.,க்கள் அடங்கிய சிறப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் நெடுஞ்சாலை, சந்தேகிக்கப்படும் இடங்களில் சோதனை நடத்துவர். கடந்த ஆண்டு மட்டும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலைச் சேர்ந்த 121 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது மாவட்ட அளவில் நடக்கும் பணம் பறிக்கும் செயல், விரைவில் மாநில அளவிலும் அதிகரிக்க வாய்ப்புஉள்ளது.
பொதுமக்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையுடன் இருந்து அவர்களைப் பற்றி போலீசாருக்கு தகவல் அளிக்கவும்.
இவ்வாறு அவர் கூறினார்.