ADDED : பிப் 04, 2024 06:26 AM

மும்பை: நீர்நிலைகளை தானியங்கி முறையில் சுத்தப்படுத்தும் ரோபோவை கண்டுபிடிக்கும்படி, 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹேந்திரா வலியுறுத்தி உள்ளார்.
அதற்கு தேவையான முதலீடுகளை செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
நீர் நிலைகளை சுத்தப்படுத்தும் பணியில் தானியங்கி ரோபோக்களை களமிறக்கி சீனா சோதனை ஓட்டம் பார்த்து வருகிறது. அங்குள்ள சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த நிறுவனம் 'ஹெபாவோ' என்ற பெயரில் இந்த ரோபோக்களை தயாரித்து உள்ளது.
இந்த ரோபோக்களை நீர்நிலைகளில் விட்டால் அவை தானாகவே ரோந்து சென்று எங்கெல்லாம் குப்பைகள் மிதக்கிறதோ அவற்றை சேகரித்து திரும்பும்.
சீனாவின் ஜின்ஷா நதி, புஜியாங் நதி, ஜியாலிங், கிங்கி உள்ளிட்ட நதிகளில் விட்டு சோதனை செய்ததில், அதன் செயல்பாடு சிறப்பாக இருந்தது.
இந்த ரோபோக்கள் நதியை சுத்தப்படுத்தும் வீடியோவை மஹிந்திரா குழும தலைவர் ஆனந்த் மஹிந்திரா தன் சமூக வலைதளத்தில் வெளியிட்டு, 'இது போன்ற சாதனங்கள் நம் நாட்டுக்கும் தேவை, இவற்றை ஏதேனும் ஸ்டார்ட் அப்கள் தயாரித்தால், தான் முதலீடு செய்ய தயார்' என, கூறி உள்ளார்.