நரம்பு மண்டலத்தை முடக்கி உயிர் குடிக்கும் ஜி.பி.எஸ்.,!
நரம்பு மண்டலத்தை முடக்கி உயிர் குடிக்கும் ஜி.பி.எஸ்.,!
ADDED : ஜன 28, 2025 07:23 AM

புனே: மஹாராஷ்டிராவில், ஜி.பி.எஸ்., எனப்படும், கிலன் பா சிண்ட்ரோம் பாதிப்புக்கு ஒருவர் உயிரிழந்தார். இதுவரை, 101 பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் புனேவில், ஜி.பி.எஸ்., என்றழைக்கப்படும், கிலன் பா சிண்ட்ரோம் பாதிப்பு அதிகரிக்க துவங்கி உள்ளது. இதுவரை 101 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஆண்கள் 68, பெண்கள் 33 பேர். 16 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புனேவில் ஜி.பி.எஸ்., பாதிக்கப்பட்ட ஒருவர் மேல் சிகிச்சைக்காக சொந்த ஊரான சோலாபூர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புனேவில் இந்த பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், விரைவு சோதனை படை மற்றும் புனே மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுவரை, 25,578 வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திடீரென இந்த பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன என்பதையும் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் தொற்று நோய் இல்லை என்பதால், அச்சப்படத் தேவையில்லை என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக, ஏழு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவை, மஹாராஷ்டிரா அரசு நியமித்து உள்ளது.