ADDED : நவ 29, 2024 12:10 AM

மைசூரு; ''சிறை செல்லும் அளவுக்கு நானும், எனது மகனும் எந்த தவறும் செய்யவில்லை,'' என ரேவண்ணாவுக்கு, ம.ஜ.த., -- எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா பதிலடி கொடுத்து உள்ளார்.
ம.ஜ.த., மூத்த எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா, கட்சியின் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவராக உள்ளார். இவருக்கும், கட்சியின் மூத்த தலைவரான, மத்திய அமைச்சர் குமாரசாமிக்கும் இடையில் திடீர் 'லடாய்' ஏற்பட்டு உள்ளது.
சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் நிகிலை ஆதரித்து தன்னை பிரசாரத்திற்கு அழைக்கவில்லை என்று ஜி.டி.தேவகவுடா கூறியிருந்தார். ஆனால், இதை ம.ஜ.த., தலைவர்கள் மறுத்தனர்.
இந்நிலையில் குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணா நேற்று முன்தினம் அளித்த பேட்டியில், 'கடந்த 2017ல் காங்கிரஸ் அரசு இருந்தபோது, ஜி.டி., தேவகவுடா, அவரது மகன் ஹரிஷை கைது செய்ய முயற்சி நடந்தது. குமாரசாமி தான் இருவரையும் காப்பாற்றி விட்டார்' என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து ஜி.டி.தேவகவுடா நேற்று அளித்த பேட்டி:
பெலகாவி குளிர்கால கூட்டத் தொடரின் போது ரேவண்ணாவிடம் நான் நேரடியாக கேட்பேன். என்னையும், எனது மகனையும் கைது செய்ய காங்கிரஸ் அரசு முயன்றது ஏன் என்று.
நானும், எனது மகனும் சிறைக்கு செல்லும் அளவுக்கு எந்த தவறும் செய்யவில்லை. கூட்டுறவு, உயர்கல்வி துறை அமைச்சராக பணியாற்றியுள்ளேன். எனக்கு அரசியலில் நிறைய அனுபவம் உண்டு.
அரசியல் ரீதியாக என் மீது யாரும் புகார் கூறவில்லை. முதல்வர் எனது பணியை பாராட்டினார். இது சிலருக்கு பிடிக்கவில்லை. தனிப்பட்ட முறையில் யாரையும் பழிவாங்கும் அரசியலை சித்தராமையா செய்ததில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

