பூதாகரமாகும் ஜார்ஜ் சோரோஸ் விவகாரம்; பார்லிமென்டில் விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு
பூதாகரமாகும் ஜார்ஜ் சோரோஸ் விவகாரம்; பார்லிமென்டில் விவாதம் நடத்த மத்திய அரசு முடிவு
UPDATED : டிச 09, 2024 11:37 AM
ADDED : டிச 09, 2024 11:35 AM

புதுடில்லி: ஜார்ஜ் சோரோஸ் விவகாரத்தில் அரசியல் செய்ய மாட்டோம் என்று பார்லிமென்ட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.
சோனியா இணைத் தலைவராக உள்ள FDL - AP என்ற தொண்டு நிறுவனத்திற்கு, அமெரிக்க தொழிலதிபரும், பிற நாடுகளின் பிரச்னைகளில் தலையிடுபவராக அறியப்படும் ஜார்ஜ் சோரஸின் தொண்டு நிறுவனம் நிதியுதவி செய்வதாக பா.ஜ., குற்றம்சாட்டியுள்ளது. மேலும், காஷ்மீரை தனி நாடாக கருத வேண்டும் என FDL - AP விருப்பம் தெரிவித்து உள்ளதாகவும் கூறியிருந்தது.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ள நிலையில், ஜார்ஜ் சோரோஸ் விவகாரம் தொடர்பாக பார்லிமென்டில் விவாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: நாட்டின் முன் உள்ள சில பிரச்னைகளை அரசியல் லென்ஸ் வைத்து பார்க்க முடியாது. ஜார்ஜ் சோரோஸ் மற்றும் அவர் தொடர்புடைய நபர்கள் யார் யார் என்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது காங்கிரஸ் மற்றும் ராகுல் தொடர்புடைய பிரச்னையாக மட்டும் நாங்கள் பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய மாட்டோம். நாட்டுக்கு எதிரான பிரச்னையாக இருக்கும்பட்சத்தில், தீவிரமாக எடுத்துக் கொள்வோம்.
டிச.,13 மற்றும் 14ம் தேதிகளில் லோக்சபாவிலும், டிச.,16 மற்றும் 17ம் தேதிகளில் ராஜ்ய சபாவிலும் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தலாம் என்றும் காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகளிடம் கூறியுள்ளோம்.
நாட்டுக்கு எதிரான அமைப்புகளுடன் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு தொடர்பு இருக்கும்பட்சத்தில், இந்த பிரச்னையில் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டுக் கொள்கிறேன், எனக் கூறினார்.