வீட்டு விஷேங்களுக்கு போங்க... ஓட்டு சேகரிப்பில் தி.மு.க.,
வீட்டு விஷேங்களுக்கு போங்க... ஓட்டு சேகரிப்பில் தி.மு.க.,
ADDED : மே 11, 2025 12:15 AM

சென்னை :தேர்தலுக்கு தேர்தல் புதுப்புது உத்திகளை கண்டுபிடித்து ஓட்டுகளை குவிக்கும் தி.மு.க., அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்கு அபாரமான திட்டத்தை தயாரித்துள்ளது. மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையுள்ள கட்சி நிர்வாகிகள், தாங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் காது குத்து, மஞ்சள் நீராட்டு, திருமணம் போன்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், கட்டாயம் ஆஜராகி வாழ்த்து தெரிவித்து, கைநிறைய மொய் எழுதுமாறு, தி.மு.க., தலைமை அறிவுறுத்தி உள்ளது.
எழுத்து மூலமாக அல்லாமல், வாய்மொழியாகவே மேலிருந்து கீழ் வரை இந்த அறிவுரை பகிரப்பட்டுள்ளது. நிர்வாகிகள் அவ்வாறு பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்த முழு விபரங்களையும் உடனுக்குடன் மேலிடத்துக்கு தெரிவிக்க வேண்டும்; அதன் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்டு, அவர்களுக்கு மரியாதை செய்யப்படும் என்று மேலிட நிர்வாகிகள் தெரிவித்து
உள்ளனர்.
அழையா விருந்தாளிகள்
புதுமையான இந்த ஏற்பாடு, சென்னையில் உடனடியாக அமலுக்கு வந்து விட்டது. துணை முதல்வர் உதயநிதியின் தொகுதியில் அடங்கிய சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதிகளில் வசிப்போர், தங்கள் வீடுகளில் நடத்திய சுப நிகழ்ச்சிகளில், லோக்கல் தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்று வாழ்த்தியதையும், கணிசமான மொய் எழுதியதையும் பார்த்து இன்ப அதிர்ச்சியில் மூழ்கினர்.
இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், வந்திருந்த உடன்பிறப்புகள் எல்லாரும் அழையா விருந்தாளிகள். ஆமாம், அவர்களுக்கு யாரும் அழைப்பிதழ் கொடுக்கவில்லை. அதைக்கூட பொருட்படுத்தாமல் ஆளும் கட்சியின் நிர்வாகிகள் தடபுடலாக வந்திருந்து வாழ்த்தியதை, வீட்டுக்காரர்கள் பெருமை பொங்க சொல்லி மகிழ்கின்றனர். 'மொய்' கவரில் எவ்வளவு தொகை இருந்தது என்பதை பற்றி மட்டும், எவரும் மூச்சு விடவில்லை. முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை பார்த்து தான் மொய் கவரின் கனத்தை ஊகிக்க வேண்டியிருந்தது.
வியூகம்
விஷயம் தீயாக பரவியதால், வீட்டில் விசேஷம் நடத்த இருப்பவர்கள் அவசரமாக உள்ளூர் தி.மு.க., புள்ளிகள் குறித்து தகவல் சேகரிக்க துவங்கிஉள்ளனர். இந்த ஏற்பாடு யாருடைய மூளையில் உதித்தது என்பதை அறிய அறிவாலயத்தில் விசாரித்த போது, புன்சிரிப்பு மட்டுமே பதிலாக கிடைத்தது.
ஒரு சீனியர் நிர்வாகி மட்டும் செய்தியாளரை திருப்பிக் கேட்டார்: 'அதெல்லாம் எங்கள் மரபணு மாண்பு. திருமங்கலம் பார்முலாவில் துவங்கி, ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு உத்தியை உருவாக்கி ஜெயித்து வருகிறோம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?'
வரும் சட்டசபை தேர்தலில், ஆட்சிக்கு எதிரான அதிருப்தி ஓட்டுகள், அ.தி.மு.க., - பா.ஜ., - த.வெ.க., - நாம் தமிழர் என பல கட்சிகளுக்கு பிரியும் என்பதால், சுலபமாக வெற்றி பெறலாம் என, தலைமை எதிர்பார்த்தது. ஆனால், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் மேலும் கட்சிகளை சேர்க்கும் முயற்சிகள் நடப்பதால், வியூகத்தை மாற்ற நேரிட்டது என, மேலிடத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறின.
நிதியுதவி
ஒவ்வொரு பூத்திலும், 60 சதவீதத்துக்கு குறையாமல் ஓட்டுகளை பெறும் வகையில், மொய் எழுதும் திட்டம் தீட்டப்பட்டதாக அவர்கள் மேலும் கூறினர். விசேஷ வீடு தான் என்று இல்லாமல், விபத்து போன்ற கஷ்டங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் நிதியுதவி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வசதி படைத்த மற்ற பெரிய கட்சிகளும் இதை பின்பற்றுமா என்பது தான் வாக்காளர்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி.