"வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் செல்கிறோம்": கிரீஸ் பிரதமரை சந்தித்து மோடி பேச்சு
"வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் செல்கிறோம்": கிரீஸ் பிரதமரை சந்தித்து மோடி பேச்சு
UPDATED : பிப் 21, 2024 04:58 PM
ADDED : பிப் 21, 2024 04:14 PM

புதுடில்லி: '2030ம் ஆண்டுக்குள் வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் செல்கிறோம்' என கீரிஸ் பிரதமரை சந்தித்த பின் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
15 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா வந்த கிரீஸ் பிரதமர் கிய்ரியாகோஸ் மிட்சோட்டகிஸை பிரதமர் மோடி வரவேற்றார். இதையடுத்து இரு நாட்டு பிரமர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னரும் இருவரும் நிருபர்களை சந்தித்தனர்.
முதன்மை தலைவர் மோடி
கிரீஸ் பிரதமர் பேசியதாவது: பிரதமர் மோடியிடம் நான், தொலைநோக்கு பார்வை, ஒரு முதன்மையான தலைவர் மற்றும் உண்மையான நண்பர் ஆகிய விஷயங்களை கண்டிருக்கிறேன். பல அம்சங்களில் இந்தியாவும், கிரேக்கமும் ஒன்றுடன் ஒன்று நெருங்கி காணப்படுகிறது.
சட்டவிரோத புலம்பெயர்தல், மனித கடத்தல் போன்ற விவகாரங்களில் நம்முடைய ஒத்துழைப்பு உறவு முறையை வலுப்படுத்தும். இளம் இந்தியர்கள் கிரேக்க நாட்டுக்கு வருகை தந்து, பணியாற்ற ஒரு சந்தர்ப்பமும் உருவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
வர்த்தகம் இரட்டிப்பாக்கும்
பிரதமர் மோடி பேசியதாவது: 2030ம் ஆண்டுக்குள் வர்த்தகத்தை இரட்டிப்பாக்கும் நோக்கில் இரு நாடுகளும் வேகமாகச் செல்கின்றன. மருத்துவம், தொழில்நுட்பங்கள், திறன் மேம்பாடு மற்றும் விண்வெளி வரை அனைத்து துறை வளர்ச்சிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
உக்ரைனில் நடந்து வரும் போரிலிருந்து சவால்களை உலகம் எதிர்கொண்டு வருகிறது. இந்தியா மற்றும் கிரீஸ் கலாச்சார மற்றும் மக்களிடையேயான உறவுகளின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. இரு நாடுகளின் பாதுகாப்புத் துறைகளும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளோம். இந்தத் துறையில் எங்களது ஒத்துழைப்பு உறவு முறையை மேலும் வலுப்படுத்தும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

