ADDED : செப் 19, 2024 11:04 PM

தங்கவயல் என்றாலே, 'குட்டித்தமிழகம்' என்று அழைப்பது உண்டு. உழைப்பதில் தயங்காமல் உயிரை துச்சமாக மதித்து தங்கம் எடுத்து தந்த உழைப்பாளிகள் என்று மதிப்பு பெற்றுள்ளனர்.
இது போன்று, விளையாட்டு துறையில், குறிப்பாக கால்பந்தாட்டத்தில் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்றவர்கள் தங்கவயல் வீரர்கள் என்பது நாடறிந்த உண்மை. 1930ல் ஆங்கிலேயர்கள் வாழ்விடங்களான பங்களா பகுதிகள் தவிர, தொழிலாளர் வாழும் குடியிருப்பு பகுதிகளில் காலியாக உள்ள இடங்களை மைதானங்களாக உருவாக்கி தொழிலாளர்கள் கால் பந்து பயிற்சி பெற்றனர்.
தங்கவயலில் 15 குழுக்கள் உருவாக்கப்பட்டன. இதை ஏ, பி, சி என மூன்று பிரிவுகளாக பிரித்தனர். 'ஏ' டீமில் ஆங்கிலேயர்கள்; 'பி', 'சி' பிரிவில் இந்திய தொழிலாளர்கள் இடம் பெற்று விளையாடினர்.
வெறுங்கால்
ஆங்கிலேயர்கள், இந்திய வீரர்களின் திறமைக்கு மதிப்பளித்து, சேர்ந்து விளையாடினர். காலில் பூட்ஸ் அணிந்து விளையாடிய ஆங்கிலேய வீரர்களுக்கு எதிராக, வெறுங்காலில் விளையாடி பழக்கப்பட்ட இந்திய வீரர்கள், தாங்கள் வெற்றிப்பெற வேண்டும் என்ற வைராக்கியத்தில் விளையாடி பல முறை வெற்றி பெற்ற வரலாறு உண்டு.
ஆங்கிலேயர் அணியில், தங்கச் சுரங்க அதிகாரிகளாக இருந்த ஹுப்பர், ஸ்டேப்பில்டன், மெக்காஸ், கிப்ஸ், கென்னத், பவுல், வெஸ்லி, பூஸி, ஆண்டிக்ஸ், வில்லியம்ஸ், டங்கர்லி ஹட்சன், ஜார்விஸ், பெர்னாண்டஸ், ஹாஸ்கின் ஆகியோர் 1932 முதல் 1956 வரை இந்தியாவில் கால்பந்து விளையாட்டை ஊக்குவித்தவர்கள் ஆவர்.
தங்கச் சுரங்க தொழிலாளர்களுக்கு மாரிகுப்பத்தில் ஹைகிரவுண்ட்; சாம்பியன் ரீப்பில் ஹைகிரவுண்ட்; உரிகம் பகுதியில் ஜிம்கானா மைதானங்கள் உருவாக்கினர். ஜிம்கானா மைதானத்தில், அகில இந்திய கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன.
தங்கவயலை சேர்ந்தவர்கள், பிற மாவட்டங்களில் நடக்கும் கால்பந்து போட்டிகளில் விளையாடி, தங்கவயல் நகரின் வீரத்தன்மையை உயர்த்தினர்.
பெருமை
சர்வதேச விளையாட்டு போட்டியில் இந்திய வீரராக தங்கவயலின் முருகேஷ் சிறந்து விளங்கினார். இவர் விளையாடும் போது, தனது காலில் பந்தை ஒட்ட வைத்தார் போல் எடுத்துச் செல்வார். அப்படி செல்லும் போது, 'கோல்' போடாமல் திரும்ப மாட்டார். இவரை, கோல்கட்டாவில் கண்ணாடி அறையில் நிற்க வைத்து பெருமைப்படுத்தினர்.
தங்கவயல் கால்பந்து வரலாற்றில் 1936 முதல் 1956 வரையில் புகழ் பெற்றவர்களாக கோல்கீப்பர் கதிர்வேல்; நெடுந்துாரம் பந்தை உதைப்பதில் வல்லவரான செட்டியார், ஹாப் பேக்கர் ஆரோக்கியராஜ் சம்ராபதி, மூர்த்தி, வேலு பரசுராமன், ராமானுஜம், சுப்பிரமணி ஆகியோர் சிறந்தவர்களாக விளங்கினர்.
வேலைவாய்ப்பு
கால்பந்து விளையாட்டு, 1940க்கு பின், மேலும் வளர்ச்சி பெற்றது. கமலா நேரு டீம், கொக்கோ ராஜி டீம், கே.எப்.ஜி., ஜிம்கானா ஆரோக்கியராஜ், தெற்கு ரயில்வே சேவியர், நேஷனல் கிளப் கணேஷ், புஷ்பராஜ், கனகராஜ் என தனித் தனி டீம்கள் உருவாகின.
தங்கவயலில் கால் பந்து வீரர்கள் சிறந்து விளங்குவர் என்பதை உறுதிப்படுத்தினர்.
இது ஒரு தொழிற் பயிற்சியாக மதிக்கப்பட்டு சென்னை ரயில்வே, ஐ.சி.எப்., ஹார்பர், கேரளா டைட்டானிக், போலீஸ், பெங்களூரு ஹெச்.ஏ.எல்., - ஐ.டி.ஐ., பெல், கே.இ.பி., தங்கவயல் பெமல், என்.ஜி.இ.எப்., - எம்.இ.ஜி., என பல தொழிற்சாலைகளில் விளையாட்டுக்கென வேலை வாய்ப்பு வழங்கப்பட்டன.
பெங்களூரில் பெரும்பாலான தொழிற்சாலைகளில், தங்கவயலை சேர்ந்த கால்பந்து வீரர்கள் அதிக அளவில் இடம் பெற்றனர். தங்கவயல் சாம்பியன் ரீப் பகுதியில் 3.5 அடி உயரம் உள்ள, வாலிபர் நவகுமார். இவர், பெமல் நிறுவனத்தில் தொழிலாளராக உள்ளார். இவருக்கு உயரம் ஒரு தடையே இல்லை. சிறுவர்களுக்கு கால்பந்து பயிற்சி அளித்து, தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இந்த வழியில், கால்பந்து விளையாட்டுக்கு தங்கவயல் முத்திரை பதித்த இடமாகவே ஜொலிக்கிறது.
சலுகைகள் வழங்கல்
தங்கவயலில் பெமல் நிர்வாகம் கால்பந்து விளையாட்டில் அனைத்து சலுகைகளையும் வழங்கி விளையாட வைத்தனர். விளையாடுவதற்கு மட்டும் எங்களை தயார்படுத்தினர். தற்போது, இந்த நிலைமை இல்லை. விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவதே இல்லை
கருணாமூர்த்திகால்பந்து பயிற்சியாளர்
வாழையடி வாழை
கால்பந்து விளையாட்டில், தங்கச் சுரங்க நிறுவனத்தின் சாம்பியன் ரீப் அணியில் நானும், எனது சகோதரர் சம்பத்தும் விளையாடி வந்தோம். இதனால் எங்களை, சுரங்கத்துக்குள் வேலை செய்ய அனுப்பாமல் ஒர்க் ஷாப் தொழிலாளர்களாக வாய்ப்பு அளித்தனர். எனது மகன்கள் இருவரும், இந்திய கால்பந்து வீரர்களாக இருந்தனர். எனது பேரனும், கால்பந்து வீரனாக உருவாகி உள்ளார். இது போன்று தலைமுறை தலைமுறையாக பலரது குடும்பத்தினர் புகழ் பெற்று விளங்கினர்.
அன்பழகன்
முன்னாள் விளையாட்டு வீரர்
- நமது நிருபர் -