ADDED : டிச 05, 2024 07:31 AM
* 'குடா'வில் இருந்து 'புடா' பிரிப்பு?
மைசூரில் இருக்கிற, 'முடா' போல, கோல்டு பூமியில் 'குடா' இருக்குது. இதில் ப.பேட்டை தொகுதியும் இணைந்திருக்குது. இதை ரெண்டாக பிரித்து புதுசா ப.பேட்டைக்கென 'புடா'வை உருவாக்க ரெண்டு தொகுதி கைக்கார அசெம்பளிக்காரர்களும் ஒத்துக்கிட்டாங்க.
இதனால் ப.பேட்டை மற்றும் பொன்வயல் தொகுதியில் ஒருத்தருக்கு ஒருத்தர் அரசியல் போட்டியை தவிர்க்கலாமென முடிவெடுத்துட்டாங்க.
'குடா'வில் பொன்வயல்காரருக்கு சேர்மன் பதவி தரவேணும்னு மேடம் முயற்சி செய்து, ப.பேட்டைக்காரரிடம் ஜெயிக்க முடியாமல் தோத்துப் போயிட்டாங்க. அதன் பிரதிபலிப்பு தான் குடா போல புடா. இதற்காக தனி அலுவலகம், கமிஷனர், அதிகாரிகள் ஊழியர்கள் ஏற்படுத்தும் காலம் வெகு தொலைவில் இல்லைன்னு பேசிக்கிறாங்க.
* வேலியால் நாசமாகும் பயிர்கள்!
பாலுக்கு பூனைகள் காவலுக்கு இருப்பது போல, கோலாரு சந்தன மர தோப்பில் 20 ஆண்டுகள் நல்லபடி வளர்த்து அறுவடைக்கான பருவத்துக்கு தயாரா இருந்த 25 மரங்களை வெட்டி கடத்திட்டாங்களாம்.
இதேபோல பத்து வருஷத்துக்கு முன்னாடி கடத்தல் சம்பவம் நடந்தபோதும், காக்கி நிலையத்தில் புகார் செய்தும் எந்த பிரயோஜனமும் ஆகல. இப்பவும் காக்கியிடம் தான் புகார் செய்யணும். 50 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்குரிய மரமாச்சே... யார் மீது சந்தேகம்னு மரங்களின் உரிமையாளரிடம் கேட்டால், அவரு வனத்துறை காரர்கள் மீது தான்னு சொல்றாரு. அப்படின்னா வேலிகளால் தான் பயிர்கள் நாசமாகுதா?
* கர்ப்பிணியர் அங்கலாய்ப்பு!
மைனிங் குடியிருப்பு பகுதிகளுக்கு 17 வார்டுகள் இருக்குது. இங்கு ஒரே ஒரு பிரசவ மருத்துவமனை கூட இல்லையே. முன்பு மைனிங் பகுதியில் இருந்த மகப்பேறு மருத்துவமனைகளை எல்லாம் மூடிட்டாங்க. இதனால் கர்ப்பிணியர்களின் நிலையை அரசு இதுவரை கண்டுக்கவே இல்லை.
அரசு தரப்பில் இலவச வளைகாப்பு நடத்த அக்கறை காட்டுறவங்க புதுசா மகப்பேறு மருத்துவமனை ஏற்படுத்த கவனம் செலுத்தலையேன்னு அங்கலாய்கிறாங்க.
* காடாக மாறிய ஏரி!
கென்னடிஸ் ஏரி முழுக்க முட்புதர் மயமாகி, காடாக மாறி இருக்குதே, இதை பற்றி முனிசி., ஆபீசர்களுக்கு தெரியுமா; தெரியாதா. யாரும் போய் சொல்லலியா.
இங்கு விஷ ஜந்துக்கள் சரளமாக ஊர்ந்து ஓடுதுங்க; சர்வ சாதாரணமாக படம் எடுத்து ஆடுதுங்க. இவற்றால் பாதிப்பு ஏற்படும் முன்பே முனிசி., ஆக் ஷன் எடுக்க வேணும்னு அப்பகுதி ஜனங்களோட எதிர்பார்ப்பு இருக்குது.
மேற்கு பகுதியில் இருந்து கிழக்கே பாய்ந்தோடி வருகிற மழைநீர் வெள்ளம் இந்த ஏரியில் தங்க இடமில்லாததால் வீடுகளில் நுழைவதை தடுப்பாங்களா? இல்லை வேடிக்கை பார்ப்பாங்களா? இதை யாரிடம் தான் கூற வேணுமோ?