ADDED : அக் 29, 2025 02:41 AM
புதுடில்லி: காங்கிரஸ் முன்னாள் எம்.பி., வசித்த அரசு பங்களாவில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டதை எதிர்த்து அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நவ., 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.,யுமான உதித்ராஜ், புதுடில்லி பண்டாரா பார்க் பகுதியில் அரசு பங்களாவில் வசித்தார். இந்த பங்களா, வருமான வரித்துறை அதிகாரி என்ற முறையில் அவரது மனைவி சீமாவுக்கு ஒதுக்கப்பட்டு இருந்தது .
கடந்த ஆண்டு நவம்பரில் சீமா பணி ஓய்வு பெற்றார். விதிமுறைப்படி அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்த பங்களாவில் வசிக்க அனுமதிக்கப்பட்டது. அவகாசம் முடிந்தும் காலி செய்யாததால், நகர்ப்புற மேம்பாட்டுத் துறையினர், உதித்ராஜ் வசித்த பங்களாவில் இருந்து பொருட்களை 24ம் தேதி அப்புறப்படுத்தி, 'சீல்' வைத்தனர்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, டில்லி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், சீமா ராஜ் மனுத்தாக்கல் செய்தார். நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்த்னா முன்னிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையை நவ., 12ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

