மைசூரு மகாராஜா வாரிசுகள் மீது வழக்கு தொடர அரசு முடிவு
மைசூரு மகாராஜா வாரிசுகள் மீது வழக்கு தொடர அரசு முடிவு
ADDED : ஜன 17, 2025 07:10 AM
பெங்களூரு: மைசூரு மகாராஜாக்களின் வாரிசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து சட்ட அமைச்சர் எச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
பெங்களூரு அரண்மனையை கைப்பற்றிய 1997 சட்டத்தின் செல்லுபடியை உறுதி செய்யக் கோரி, கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில், மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் 2014 டிசம்பர் 21ம் தேதியிட்ட உத்தரவின்படி அரண்மனை மைதானத்திற்கு அருகே செல்லும் பல்லாரி சாலையில் ஒரு சதுர மீட்டர் இடத்திற்கு 2,83,500 ரூபாய்; ஜெய மஹால் சாலைக்கு 2,04,000 ரூபாய் என்று விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
2 லட்சம்
கடந்த 2001ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி பெங்களூரு அரண்மனைக்குள் 2 லட்சம் சதுர மீட்டரில் நிரந்தர கட்டடம் கட்டியுள்ள மைசூரு மகாராஜாக்களின் வாரிசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரண்மனைக்குள் இருக்கும் அங்கீகரிக்கப்படாத கட்டடங்களை 15 நாட்களுக்குள் அகற்றுவது தொடர்பாக அரசால் 2025 ஜனவரி 9ம் தேதி அன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்படாத கட்டடங்களில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு அரசின் அனுமதியை பெறுவது அவசியம்.
அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தீர்வு கிடைக்கும் வரை சட்டப்படி வழக்கை கையாள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தில் 14,300 கோடி ரூபாய் மதிப்பிலான வன நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த நிலத்தை மீட்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
எச்.எம்.டி.,
பெங்களூரில் உள்ள எச்.எம்.டி., தொழிற்சாலை வசம் உள்ள வன நிலம் குறித்தும் விவாதம் நடந்தது.
பெங்களூரு நகரில் பசுமை போர்வையுடன் இருக்கும் அந்த வன நிலத்தை எச்.எம்.டி., நிறுவனம் ஏலம் விடுவதாக கடந்த 2018 ஜூலை 17ம் தேதி, தலைமைச் செயலர் தலைமையில் நடந்த கூட்டத்தின் போது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நிலத்தை எச்.எம்.டி., நிறுவனம் வேறு நிறுவனங்களுக்கு விற்பதால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு, பெங்களூரு மக்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது என்பது அரசின் கருத்து.
ரூ.413 கோடி
பிராண்ட் பெங்களூரு திட்டத்தின் கீழ், மாநகராட்சியால் நிர்வகிக்கப்படும் மருத்துவமனைகளை மேம்படுத்த 413.71 கோடி ரூபாய் கொடுக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பாழடைந்த கட்டடங்கள் புதிய கட்டடங்களாக மாற்றப்படும்.
மாநகராட்சியின் 13 மருத்துவமனைகள் 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாகவும்; ஐந்து மருத்துவமனைகள் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளாகவும் மேம்படுத்தப்படும்.
மாநகராட்சி சார்பில் 22 பல் மருத்துவமனைகள் மற்றும் ஏழு பிசியோதெரபி மருத்துவமனைகளும் நிறுவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.