ஈரான் போராட்டத்தில் அரசு ஊடக மையம் தீக்கிரையானது! தவறான செய்தி பரப்புவதாக மக்கள் கொந்தளிப்பு
ஈரான் போராட்டத்தில் அரசு ஊடக மையம் தீக்கிரையானது! தவறான செய்தி பரப்புவதாக மக்கள் கொந்தளிப்பு
ADDED : ஜன 10, 2026 12:11 AM

டெஹ்ரான்: ஈரான் அரசு ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்புவதாக கூறி, அரசு ஊடக அமைப்பான ஐ.ஆர்.ஐ.பி., நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு மைய அலுவலகத்தை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்தனர்.
மேற்காசிய நாடான ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் கரன்சி மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால் அங்குள்ள மக்கள், கடந்த இரு வாரங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டக்காரர்களின் கூட்டத்தை கலைக்கவும், போராட்டங்களை தடுக்கவும் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகள், துப்பாக்கிச்சூடு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த 28ம் தேதி துவங்கிய இப்போராட்டத்தில் இதுவரை, குழந்தைகள் உட்பட 45 பேர் பலியாகி உள்ளனர்.
முடக்கம்
இந்நிலையில், இஸ்பஹான் நகரில் உள்ள ஐ.ஆர்.ஐ.பி., எனும் அரசுக்கு சொந்தமான வானொலி மற்றும் தொலைக்காட்சியின் ஒருங்கிணைந்த ஊடக மைய அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தவறான செய்திகளை பரப்புவதாக கூறி அந்த அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தினர்.
மேலும் போராட்டக்காரர்கள், தெற்கு பகுதியில் உள்ள முக்கிய துறைமுக நகரான பண்டர் அப்பாசில், வீதிகளில் டயர்களை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை தடுக்க ஈரான் முழுதும் இன்டர்நெட் சேவை, தொலைபேசி சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
விலைவாசி உயர்வை காரணம் காட்டி துவங்கப்பட்ட இந்த போராட்டம், ஒரு பரந்த அரசியல் இயக்கமாக மாறி, ஆட்சி மாற்றத்துக்கு அழைப்பு விடுக்கும் அளவுக்கு சென்றுள்ளது.
போராட்டக்காரர்கள் இஸ்லாமிய குடியரசு அமைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு விடுக்கின்றனர்.
நாடு முழுதும் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. இதில், மக்களின் பங்கேற்பின் அளவு நாளுக்கு நாள் உயர்ந்து வருவது அரசின் மீதான கோபத்தை வெளிப்படுத்துகிறது என, அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிருப்தி
ஈரானின் கடைசி மன்னரான முகமது ரெசா ஷா பஹ்லவி ஆட்சியில் நிலவிய கடுமையான கட்டுப்பாடுகள், ஊழல் மற்றும் மேலைநாட்டு கலாசார திணிப்பு காரணமாக, மக்கள் அதிருப்தி அடைந்தனர். 1979ல் ஈரானில் புரட்சி வெடித்தது.
இதையடுத்து அவர், 1979 ஜன., 16ல் நாட்டை விட்டு வெளியேறினார். பின், 1979 பிப்ரவரியில், கமேனி தலைமையிலான அரசு அமைந்தது.
புதிய அரசு, மன்னராட்சியை ரத்து செய்தது. இதற்கிடையே, மன்னர் முகமதுவின், 17 வயது மகன் ரெசா பஹ்லவி, 1978ல், விமானப்படை பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.
மன்னராட்சி ரத்து செய்யப்பட்டதால், அவர் நாடு திரும்புவது தடைபட்டது. 45 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள அவர், தற்போதைய போராட்டங்களை முன்னின்று ஒருங்கிணைத்து வருவதாக கூறப்படுகிறது. 

