8 வயது சிறுமி கை துண்டிப்பு விசாரணைக்கு அரசு உத்தரவு
8 வயது சிறுமி கை துண்டிப்பு விசாரணைக்கு அரசு உத்தரவு
ADDED : அக் 05, 2025 12:10 AM
பாலக்காடு: கேரளாவின் பாலக்காடில், டாக்டர்கள் அலட்சியத்தால், 8 வயது சிறுமியின் கை துண்டிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டியதை அடுத்து, இது குறித்து விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பல்லசன்னா பகுதியைச் சேர்ந்த சிறுமி விநோதினி, 8. இவர் கடந்த செப்., 24ல் வீட்டில் விளையாடியபோது கீழே விழுந்ததில் வலது கையில் முறிவு ஏற்பட்டது. பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுமிக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு கையில் கட்டு போடப்பட்டது.
எனினும் வலி தொடர்ந்து அதிகரித்த நிலையில் ஐந்து நாட்கள் கழித்து சிகிச்சைக்கு வந்தால் போதும் என, டாக்டர்கள் கூறியதாக விநோதினியின் பெற்றோர் தெரிவித்தனர். அடுத்த நாள் சிறுமியின் கை வீங்கியதுடன் நிறமும் மாறியிருந்தது.
இதையடுத்து கடந்த 30ல் மீண்டும் அதே மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது சிறுமியின் கை நிறம் மாறியிருந்தது. இதனால், மாவுக்கட்டை அவிழ்த்து டாக்டர்கள் சோதனையிட்டபோது, சிறுமி கையில் ரத்த ஓட்டம் இல்லாதது தெரியவந்தது.
டாக்டர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில், சிறுமி விநோதினியை கோழிக்கோடு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரிக்காக அனுமதித்தனர். கையில் ரத்த ஓட்டம் தடைபட்டதை அடுத்து, காயம் அடைந்த கையை துண்டிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என, அங்கிருந்த டாக்டர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து சிறுமியின் கை துண்டிக்கப்பட்டது.
இந்நிலையில், பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால், தன் மகளின் கையை துண்டிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர். இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க, மாநில சுகாதாரத்துறை இயக்குநருக்கு அமைச்சர் வீணா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.