ADDED : நவ 09, 2025 01:09 AM
புதுடில்லி: டில்லியில் மேலும், ஒன்பது பஸ் டிப்போக்களில் கனரக மின்சார வாகனங்களுக்கான 'சார்ஜிங்' நிலையங்கள் அமைக்க அரசுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.
டில்லி அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:
டில்லி அரசு பஸ்கள் அனைத்தும் அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் மின்சார பஸ்களாக மாற்றப்படும்.
எனவே, மேலும் ஒன்பது இடங்களில் கனரக மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரோஹிணி 37வது செக்டார், கேஷோபூர், நங்லோய், கல்காஜி, சுக்தேவ் விஹார், நந்த் நாக்ரி, காஜிபூர் மற்றும் ஹசன்பூர் ஆகிய பஸ் டிப்போக்களில் சார்ஜிங் நிலையம் அமைக்க டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் 8,000 மின்சார பஸ்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. டில்லி மாநகரில் தற்போது, 3,400 மின்சார பஸ்கள் இயக்கப்படுகின்றன. அடுத்த சில மாதங்களில் இது, 6,000ஆக அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

