ரிதாலாவில் பயங்கர தீ விபத்து 500 குடிசைகள் சாம்பல்; ஒருவர் உயிரிழப்பு
ரிதாலாவில் பயங்கர தீ விபத்து 500 குடிசைகள் சாம்பல்; ஒருவர் உயிரிழப்பு
ADDED : நவ 09, 2025 01:08 AM

புதுடில்லி: ரோஹிணி ரிதாலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 500 குடிசைகள் எரிந்து சாம்பலாகின. ஒருவர் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
புதுடில்லி ரோஹிணி, ரிதாலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே 500க்கும் மேற்பட்ட குடிசைகளில் கூலித் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். நேற்று முன் தினம் இரவு, 10:50 மணிக்கு ஒரு குடிசையில் ஏற்பட்ட தீ, மளமளவென பரவியது. அங்கு வசித்த மக்கள் அலறியடித்து வெளியேறினர்.
குடிசைகளில் இருந்த காஸ் சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதால், தீ கொழுந்து விட்டு எரிந்தது. அதனால், யாரும் அருகில் செல்ல முடியவில்லை. தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி நேற்று அதிகாலையில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயில் சிக்கி முன்னா என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் ராஜேஷ், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் ரேகா குப்தா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
ரிதாலாவில் ஏற்பட்ட தீ விபத்து துரதிர்ஷ்டவசமானது. அங்கு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வீடுகளை இழந்த 5-00 குடும்பங்களுக்கும் தற்காலிக தங்குமிடங்கள் அமைத்து தரப்பட்டுள்ளன. உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
ரிதாலா சமூகக் கூடத்திலும் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தை மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்துவ் வருகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் குறித்த விவரங்களை வருவாய்துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர். விரைவில் அங்கு புதிய குடிசைகள் அமைத்து தரப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

