நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
நுழைவு தேர்வு சிக்கல்களை ஆராய நிபுணர் குழு கருத்தை கேட்கிறது அரசு
ADDED : அக் 03, 2025 03:37 AM

புதுடில்லி:'ஜே.இ.இ., - நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் நிலவும் சிக்கல்களை களைய, நிபுணர் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாடு முழுதும் உள்ள பொறியியல் கல்லுாரிகள், மருத்துவக் கல்லுாரிகள், பல்கலைகளில் சேர பல்வேறு நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
குறிப்பாக, பிளஸ் 2 முடித்த பின் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்காக, ஏராளமான மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
சில தனியார் பயிற்சி மையங்கள், மாணவர்களிடம் அதிக கட்டணங்களை பெற்று, உரிய முறையில் பாடம் நடத்தாமல் உள்ளதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், நுழைவுத் தேர்வுகளில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராய ஒன்பது பேர் அடங்கிய குழுவை, கடந்த ஜூனில் மத்திய கல்வி அமைச்சகம் அமைத்தது.
உயர்கல்வி செயலர் வினீத் ஜோஷி தலைமையிலான இந்த குழு அளிக்கும் பரிந்துரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில், நுழைவுத் தேர்வுகளில் உள்ள சிக்கல்களை களைய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நாட்டில் நடத்தப்படும் பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளை, பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். பிளஸ் 2 பாடத்திட்டத்தை அடிப்படையாக வைத்து தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
இருப்பினும், அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மாணவர்களுக்கு சிரமமாக உள்ளது. ஆகையால், பிளஸ் 2 பாடத்திட்டத்தால், நுழைவுத் தேர்வுகளில் ஏதேனும் சிக்கல்கள் நிலவுகிறதா என்ற கோணத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் கல்வி வாரிய உறுப்பினர்கள், பிளஸ் 2 பாடத்திட்டத்துக்கும், நுழைவுத் தேர்வுக்கும் பொருத்தமில்லாமல் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அது தொடர்பான தரவுகளை, மத்திய அரசு சார்பில் நியமிக்கப்பட்ட குழு பரிசீலித்து பகுப்பாய்வு செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.