இரண்டாம் கட்ட புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த கவர்னர் ஒப்புதல்
இரண்டாம் கட்ட புறவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த கவர்னர் ஒப்புதல்
ADDED : பிப் 14, 2024 10:04 PM
புதுடில்லி:நீண்டகாலமாக நிலுவையில் உள்ள நகர்ப்புற விரிவாக்கச் சாலை இரண்டாம் கட்ட திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த, டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா நேற்று, ஒப்புதல் அளித்தார்.
டில்லி கவர்னர் மாளிகை , வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுடில்லி நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, வடக்கு மற்றும் தென்மேற்கு டில்லி இடையே புறவழிச்சாலை அமைக்க, ஏழு ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்யப்பட்டது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற, 2016ம் ஆண்டு, தென்மேற்கு டில்லியில் உள்ள பர்தால் கிராமத்தில் நிலம் கையகப்படுத்த, டில்லி மேம்பாட்டு ஆணையம் கோரிக்கை விடுத்தது.
ஆனால், நில உரிமையாளர்கள், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் கிடந்தது. இந்த திட்டம், டில்லியின் மூன்றாவது வட்டச் சாலையாக டில்லி மாஸ்டர் பிளானில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தவுலா குவான் மற்றும் வெளி மற்றும் உள் வட்டச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், வடக்கு மற்றும் தென்மேற்கு டில்லி டையே இந்த புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
வடக்கு டில்லியில் நரேலா, பவானா மற்றும் ரோகிணி ஆகிய பகுதிகளை துவாரகா துணை நகரம், சர்வதேச விமான நிலையம் மற்றும் குருகிராம் ஆகியவற்றுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை -1 மற்றும் இரண்டு ஆகியவற்றையும், இந்த புறவழிச்சாலை வழியாக அடையலாம்.
மேலும் தேசிய நெடுஞ்சாலை -- 1, 2, 8, -10, ஆகியவற்றையும், மேற்குப் பகுதியில் உள்ள அனைத்து முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளையும் இணைக்கும் வகையில் இந்த புறநகர் சாலை அமைக்கப்படும்.
அதேபோல, ஹரியானாவின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு இடையே அம்பாலா, பானிபட், கர்னால், ரோஹ்தக் மற்றும் பஹதுர்கர் மாவட்டங்களையும் இந்தச் சாலை இணைக்கும்.
இந்த புறவழிச்சாலை திட்டம் மற்றும் நில உரிமையாளர் தொடர்ந்த வழக்குகள் ஆய்வு செய்த கவர்னர் சக்சேனா, டில்லி மேம்பாட்டு ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டு பர்தால் கிராமத்தி நிலம் கையகப்படுத்த நேற்று ஒப்புதல் அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

