சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடத்த முதல்வருக்கு கவர்னர் அறிவுறுத்தல்
சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடத்த முதல்வருக்கு கவர்னர் அறிவுறுத்தல்
ADDED : டிச 18, 2024 08:43 PM
புதுடில்லி,:சட்டசபையில், சி.ஏ.ஜி., எனப்படும் தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கைகளை தாக்கல் செய்ய, துணைநிலை கவர்னர் சக்சேனா, டில்லி முதல்வர் ஆதிஷிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, துணைநிலை கவர்னர் சக்சேனா, முதல்வர் ஆதிஷி சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதம்:
டில்லி அரசின் கணக்குகளை ஆய்வு செய்து மத்திய அரசின் தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்யாமல் அரசு வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது.
சட்டசபையில் தாக்கல் செய்யாமல் நிலுவையில் உள்ள தலைமை கணக்கு அதிகாரியின் 14 அறிக்கைகளை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக இன்றோ அல்லது நாளையோ சட்டசபையில் சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும்.
சட்டசபைக் கூட்டம் ஒரு ஆண்டில் குறைந்தது மூன்று முறையாவது நடத்தப்பட வேண்டும். ஆனால், டில்லி அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் 5 முறை மட்டுமே சட்டசபையைக் கூட்டியுள்ளது. இது, சட்டசபை நடைமுறையை கேலிக்கூத்து ஆக்குவது போல இருக்கிறது.
முதல்வர் பதவி வகிக்கும் நீங்கள், சபாநாயகருடன் ஆலோசித்து, 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டலாம். தற்போதைய அரசின் பதவிக்காலம் பிப்ரவரியில் நிறைவடைய இருப்பதால், இந்த அறிவுறுத்தலை ஏற்று, தலைமை கணக்கு அதிகாரியில் அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் பல முறை கடிதம் அனுப்பி இருந்தேன்.
அரசியல் நிர்ணய சபையால் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75 வது ஆண்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஒளிவுமறைவின்றி கணக்கு அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
அரசின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்த சட்டப்பூர்வ தணிக்கையின் முக்கியத்துவத்தை முதல்வர் பதவி வகிக்கும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். கணக்கை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்தும் அரசின் இந்தச் செயல், மக்களின் குரலை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டசபைக்கு பெருத்த அடி.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கைகளை சட்டசபையில் தாக்கல் செய்ய டில்லி அரசுக்கு உத்தரவிடக் கோரி, எதிர்க்கட்சியான பா.ஜ., உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.